புளூவேல் விளையாடிய இளைஞரின் திகிலூட்டும் அனுபவம்: இது கேமோ, ஆப்-போ அல்ல!

விபரீத விளையாட்டான புளூவேல் விளையாடிய காரைக்காலைச் சேர்ந்த இளைஞர், தனக்கு நேரிட்ட திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, யாரும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
புளூவேல் விளையாட்டிலிருந்து மீட்கப்பட்ட இளைஞருடன் காவல்துறை அதிகாரி.
புளூவேல் விளையாட்டிலிருந்து மீட்கப்பட்ட இளைஞருடன் காவல்துறை அதிகாரி.

காரைக்கால்: விபரீத விளையாட்டான புளூவேல் விளையாடிய காரைக்காலைச் சேர்ந்த இளைஞர், தனக்கு நேரிட்ட திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, யாரும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

காரைக்கால் பகுதியில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் பணியாற்றும் அலெக்சாண்டர், விடுமுறையில் ஊருக்குச் சென்ற போது இந்த ப்ளூவேல் விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளார். ஆனால் விளையாட்டின் காரணமாக அவர் விடுமுறை முடிந்தும் சென்னை திரும்பவில்லை.

இதுகுறித்து, புளூவேல் கேம் விளையாடிய அலெக்ஸ்சாண்டர் கூறியதாவது, இது டவுன்லோடு செய்யும் ஆப்-போ அல்லது டவுன்லோடு செய்து ஆடும் விளையாட்டோ அல்ல. வெறும் லிங்க் மட்டுமே இருக்கும். வாட்ஸ் அப்பில் (கட்செவி அஞ்சல் ) லிங்க் கிடைத்தவுடன் இந்த விளையாட்டை எப்படியாவது விளையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. இருப்பினும் இது உயிர் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பது போகப்போகத்தான் தெரிந்தது.
 
குறிப்பாக, முதலில் நமது பெயர், இமெயில், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அட்மின்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு போட்டோ அனுப்ப வேண்டும். பின்னர் நள்ளிரவில் பேய் படம் பார்க்க வேண்டும். அனைத்துமே நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான். பயமே இந்த கேமில் இருக்கக்கூடாது என்பதுதான் நோக்கம் என்று அட்மின்கள் கூறுகிறார்கள்.

பின்னர் சுடுகாடு அல்லது கடல் பகுதி, ஏரி போன்ற இடங்களுக்கு நள்ளிரவில் தனியாக சென்று செல்ஃபி எடுத்து குரூப் அட்மின்களுக்கு அனுப்ப வேண்டும். 5-ஆவதாக கையில் கத்தி அல்லது பிளேடால் புளூவேல் திமிங்கலம், மீன் போன்றவைகளை வரைய வேண்டும். நான் 5-ஆவது நிலையை நோக்கி போகும்போதுதான், காவல் துறையினர் என்னை மீட்டனர். 

தினமும் பயங்கர காட்சிகள் நிறைந்த சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தேன். பயத்தைப் போக்குவதே இந்த விளையாட்டின் நோக்கம் என்றாலும் மனதளவில் பாதிக்கப்பட்டேன்.

இந்த விளையாட்டால் நான் என் குடும்பத்தாரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன். எப்போதும் என் அறைக்குள்ளேயே இருப்பேன். இது எனக்கு மிக மோசமான மன அழுத்தத்தை தந்தது. இந்த விளையாட்டில் இருந்து வெளியே வர விரும்பினேன். ஆனால் என்னால் செய்ய முடியவில்லை.

இனி இதுபோன்ற விளையாட்டில் ஈடுபட மாட்டேன். இது இக்கட்டான விஷயங்களை சவாலாக எடுத்து செய்தாலும் கூட, மனதளவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. யாரும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டாம் என்று கூறினார்.

பின்னணி: 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செல்லிடப்பேசியில் ஆன்லைன் மூலம் புளூவேல் விளையாடும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும்படி காவல்துறை டிஜிபி சுனில்குமார் கவுதம் சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காரைக்கால் பகுதி நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெரோம்ஜேம்ஸ்பாண்டுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தனது மூத்த சகோதரர் புளூவேல் கேம் விளையாடுவதுபோல் தெரிகிறது. நள்ளிரவில் வெளியே புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அவரது நடவடிக்கை சரியில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, நிரவி போலீஸார் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அலெக்ஸ்சாண்டர் (23) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்லிடப் பேசியை பரிசோதித்தபோது, அவர் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, அலெக்ஸாண்டரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, புளூவேல் விளையாட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து அறிவுரை அளித்தனர்.

பின்னர், மண்டல காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com