கோவையில் பலத்த மழை: நொய்யல், கௌசிகா நதிகளில் வெள்ளப் பெருக்கு

கோவை மாநகரம்,  புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் பல ஆண்டுகளுக்குப் பிறகு கெளசிகா நதி, நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கோவையில் பலத்த மழை: நொய்யல், கௌசிகா நதிகளில் வெள்ளப் பெருக்கு

கோவை மாநகரம்,  புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் பல ஆண்டுகளுக்குப் பிறகு கெளசிகா நதி, நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தையொட்டி உள்ள கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்து வந்தாலும்,  ஆகஸ்ட் மாதம் வரை கோவையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாத நிலை இருந்து வந்தது.

இதனால்,  கோவையில் உள்ள பல குளங்கள் வறண்டு காணப்பட்டன.  மேலும், நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்குச் சென்றிருந்தது. புறநகர்ப் பகுதிகளில் தென்னை மரங்கள் நூற்றுக்கணக்கில் கருகின. கால்நடைகளுக்குத் தீவனம், குடிநீர் இல்லாததால்  மாடுகளை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

கடந்த மாதம் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை இல்லை. இந்நிலையில்,  மாவட்டம் முழுவதிலும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதேபோல்,  மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்ததால் நொய்யல் வடிநிலத்தில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து தொடங்கியது.

இதைத் தொடர்ந்து,  கடந்த சனிக்கிழமையும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை பெய்தது. இந்நிலையில், கோவை மாநகர்,  புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. அதிகாலை 1 மணி அளவில் தூரலுடன் தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல வலுக்கத் தொடங்கியது. அதிகாலை 4 மணி வரை சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து இடி, மின்னலுடன் கொட்டிய மழையால் கோவை மாநகரம் வெள்ளக் காடானது.

ராமநாதபுரம் சந்திப்பு,  அவிநாசி சாலை, பீளமேடு,  காந்திபுரம்,  ரயில் நிலையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.
கெளசிகா நதி, நொய்யலில் வெள்ளம்:மாநகரில் பெய்த மழை வெள்ளத்துடன்,  சூலூர் பகுதியில் 88 மி.மீ. அளவுக்கு கொட்டிய மழை நீரும் சேர்ந்ததால்  நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கோவை மாநகரின் ஒரு பகுதி,  நீலாம்பூர், வெள்ளானப்பட்டி பகுதிகளில் பெய்த மழையால் கெளசிகா நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கணியூர் அருகே உள்ள வாகராயம்பாளையம் பகுதியில் தொடங்கி,  கணபதிபாளையம், கிட்டாம்பாளையம், தெக்கலூர் பகுதிகளில் உள்ள கெளசிகா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வஞ்சிபாளையம் அருகே நொய்யலில் கலந்தது.  இந்த மழையால் கோவை மாநகரில் சிங்காநல்லூர் குளத்துக்கு மேற்கில் உள்ள குளங்களுக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நீர் வரத்து இல்லை என்றாலும், கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் ஒரே இரவில் நிரம்பின.  அதன்படி, சூலூர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்வரத்து இன்றி வறண்டிருந்த உள்வேலாங்குட்டை, புங்கன்குட்டை  ஆகியவை செவ்வாய்க்கிழமை காலை நிரம்பின.

இதிலிருந்து வெளியேறும் உபரிநீரால் அதைத் தொடர்ந்துள்ள ராமச்சந்திரன் குளம், கலங்கல் குட்டை உள்ளிட்டவை நிரம்பின. பாப்பம்பட்டி பகுதியில் ஓடைகளில் நீர் பெருக்கெடுத்ததால் கலங்கல் குட்டை நிரம்பியது. இந்தக் குட்டையின் கரையில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளில் நீர் புகுந்தது. இதை பொதுப் பணித் துறை அதிகாரிகள் சரிசெய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காசிகவுண்டன்புதூரில் உள்ள நாரணத்தான்குட்டைக்குச் செல்லும் நீர் வழிப் பாதை அடைப்புகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும்,  மழை தொடரும்பட்சத்தில் இதன் வழியாக உபரிநீர் நொய்யலுக்கு திருப்பப்படும் என்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் இடிந்தன: மாநகரில் பெய்த பலத்த மழையால் புலியகுளம் அருகே உள்ள கல்லுக்குழி குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. இதில், அங்குள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இரு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.கோவை மாநகராட்சி 39-ஆவது வார்டுக்கு உள்பட்ட  பீளமேடு, பொரிக்கடை சந்து  பகுதியில் இருந்த வீடுகள் நீரில் மூழ்கின. இதில்,  4 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையையொட்டி உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
சூலூர் 88, வால்பாறை 68, கோவை தெற்கு 49, சின்கோனா 30, விமான நிலையம் 22.60, வேளாண் பல்கலைக்கழகம் 19.20, பொள்ளாச்சி 15.

சிறுவாணி அணைப் பகுதி 15.
சிறுவாணி அணையின் நீர் இருப்பு 35.26 அடியாக உயர்ந்துள்ளது. பில்லூர் அணைக்கு வினாடிக்கு 1,229 கனஅடி நீர்வரத்து இருக்கும் நிலையில் அணையில் 87.25 அடி நீர் இருப்பு உள்ளது.

தடுப்பணைகள் வேண்டும்: கெளசிகா நதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் அந்த நீரை சேமிப்பதற்கான தடுப்பணைகள் இல்லாததால் நீரின் பெரும் பகுதி நொய்யலில் கலந்து வீணாகிவிட்டதாக அத்திக்கடவு- கெளசிகா நதி மேம்பாட்டுச் சங்கச் செயலர் பி.கே.செல்வராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கெளசிகா நதியின் மொத்த நீளமான 48 கிலோ மீட்டரில் மொத்தம் 19 தடுப்பணைகள் மட்டுமே உள்ளன. தற்போது, பெய்த மழையால் 5 தடுப்பணைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

கெளசிகா நதியை ஆறாகப் பார்க்காமல் நீர்ப்பிடிப்புப் பகுதியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற கூற்றுக்கு ஏற்ப நதியின் கடைமடை பகுதியில் மட்டுமே மழை பெய்தது.  மேலும், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கெளசிகா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நதியில் மேலும் 10 இடங்களில் தடுப்பணைகள் வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்துள்ளோம். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் அமைத்திருந்தாலும் கூட, இந்த நீரை மொத்தமாக சேமித்து வைத்திருக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com