மாணவி அனிதா மரணம்: நான்காவது நாளாக 37 இடங்களில் போராட்டம்- 4 ஆயிரம் பேர் பங்கேற்பு

அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை அடுத்து அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை 37 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை அடுத்து அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை 37 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்த விவரம்:
அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பை இழந்ததால், கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அரசைக் கண்டிக்கும் வகையிலும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னையில் கடந்த 2-ஆம் தேதி முதல் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் சார்பில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
நான்காவது நாளாக இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்து, கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரியும், அனிதா இறப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷமிட்டனர். இந்தப் போராட்டத்தில் நடிகை ரோகிணி, திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கௌதமன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் இடைமறித்து கைது செய்தனர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், வண்ணாரப்பேட்டை தியாகராஜா கல்லூரி மாணவர்கள், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சாலை மறியல், ரயில் மறியல், முற்றுகை போன்ற போராட்டங்கள் மட்டும் 7 இடங்களில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற 33 பெண்கள் உள்பட 183 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல ஆர்ப்பாட்டம், வாயில் போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துதல் போன்றவை 30 இடங்களில் நடைபெற்றது. இதில் 567 பெண்கள் உள்பட 4054 பேர் பங்கேற்றனர்.
மெரீனாவில்...: மெரீனாவில் சில அமைப்புகள் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து, மெரீனா கடற்கரையின் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 
அதேபோல அங்கு கடைகளையும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்புக்காக போலீஸார் அங்கு நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர்.


சென்னை ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அனிதாவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையிலும், நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் மெழுகுவர்த்தி ஏந்திபோராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com