அதிமுக அரசு மணல் கோட்டை அல்ல; யாராலும் கலைக்க முடியாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக அரசு மணல் கோட்டை அல்ல, மக்கள் மனதால் கட்டப்பட்ட கோட்டை. எனவே, அதிமுக அரசை யாராலும் கலைக்க முடியாது என்று தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அதிமுக அரசு மணல் கோட்டை அல்ல; யாராலும் கலைக்க முடியாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக அரசு மணல் கோட்டை அல்ல, மக்கள் மனதால் கட்டப்பட்ட கோட்டை. எனவே, அதிமுக அரசை யாராலும் கலைக்க முடியாது என்று தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
ஈரோட்டில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் வெங்கடேசன் வரவேற்றார்.
இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: 
மூட நம்பிக்கையை ஒழிக்கப் பெரியாரும், தீய சக்தியை ஒழிக்க எம்ஜிஆரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். தாயை வணங்கியவர்கள், நேசித்தவர்கள், பூஜித்தவர்கள் வரலாற்றில் இடம்பெற்று இருக்கின்றனர். அந்த வரலாற்றில் எம்ஜிஆர் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார். 
எம்ஜிஆர் வெள்ளை மனம் கொண்டவர் மட்டுமல்ல. எவராலும் வெல்ல முடியாதவராகவும் வாழ்ந்தார். திரையுலகம், அரசியலில் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போயினர். அதேபோல, அதிமுகவுக்கு அரணாக இருந்து எஃகு கோட்டையாக ஜெயலலிதா மாற்றினார்.
எதிர்க்கட்சி என்றால் அரசு செய்யும் நல்லதைப் பாராட்ட வேண்டும். தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிக்கு நல்லதைப் பாராட்டும் பரந்த உள்ளம் இல்லை. தவறைச் சுட்டிக்காட்டும் எண்ணமும் இல்லை.
அதிமுக அரசு என்பது உடனே கலைத்துவிட மணலில் கட்டிய கோட்டை அல்ல. தமிழக மக்கள் மனதால் கட்டிய கோட்டை. எனவே, இதை யாராலும் கலைக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக மக்களுக்கு நாங்கள் ஆற்றும் பணி என்றும் தொடரும் என்றார். 
இவ்விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகியோரும் பேசினர். 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற கலை, இலக்கியப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசு வழங்கினார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் நன்றி கூறினார். இவ்விழாவில், அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com