அனிதா தற்கொலை, நீட் போராட்டத்திற்கு தடை கோரும் வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அனிதா தற்கொலை மற்றும் நீட் போரட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் பொது நல அவசர வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
அனிதா தற்கொலை, நீட் போராட்டத்திற்கு தடை கோரும் வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை


புதுதில்லி: அனிதா தற்கொலை மற்றும் நீட் போரட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் பொது நல அவசர வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வால், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவ, மாணவிகள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாதநிலை ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரது மருத்துவக் கனவு கலைந்து போகவே மனஉளைச்சலில் இருந்த அனிதா, கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்நிலையில், வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், 'நீட்' தேர்வு தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மாநில அரசு அனுமதிக்கக் கூடாது எனவும்,  தமிழக அரசு சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை விதிக்க வேண்டும். அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தப்படும் போராட்டங்கள் சாதாரண வாழ்க்கையை பாதிக்காது என்று உறுதி செய்ய வேண்டும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) இணையாக, மாநில அரசின் பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புக்களுக்கானப் பாடத் திட்டத்தை மேம்படுத்தவும், தலித் மாணவி எஸ். அனிதாவின் தற்கொலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு குழு அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த புதன்கிழை (செப் 5) இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், அவசரமாக விசாரிக்க என்ன தேவையிருக்கிறது என்று கேள்வி எழுப்பியதோடு, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மாநில அரசு மற்றும் மத்திய அரசையே குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com