டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்: அவைத்தலைவர் தனபால்

முதல்வருக்கு எதிராக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் தனபால் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்: அவைத்தலைவர் தனபால்


சென்னை: முதல்வருக்கு எதிராக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் தனபால் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

அவைத் தலைவர் தனபால் இது தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், செப்டம்பர் 14ம் தேதியன்று 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நீக்க வேண்டுமென டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, அவர்களைத் தகுதியின்மை செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்ற அவைத் தலைவர் தனபால் அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்களும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென நோட்டீஸ் பிறப்பித்தார். 

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், ஏழுமலை ஆகியோர் சட்டசபை செயலரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். 

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த தனபால், மனு கொடுத்த 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிலையில், 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், செப்டம்பர் 14ஆம் தேதியன்று 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவையில் இருந்து மைசூருவுக்கு இடம் மாறிய எம்.எல்.ஏ.க்கள்

கடந்த 16 நாள்களாகப் புதுச்சேரியில் தங்கி இருந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம், மைசூருவை அடுத்த கூர்க் மலைவாசஸ்தலத்துக்குச் சென்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்த கடிதத்துக்கு எந்தப் பதிலும் வராத நிலையில், வியாழக்கிழமை டிடிவி தினகரனை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கினார். இதையடுத்து, புதுவையில் தங்கியிருந்த 16 எம்.எல்.ஏ.க்களும் சென்னை புறப்பட்டுச் சென்றனர். 

மேலும், சில எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே தங்கி இருந்தனர். 

தொடர்ந்து அவர்கள் தினகரன் வீட்டில் ஆலோசனை நடத்திய பின்னர் ஆளுநரைச் சந்தித்தனர். இதனிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான ஜக்கையன் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து மீண்டும் புதுவைக்குத் திரும்ப திட்டமிட்டிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் திட்டத்தை மாற்றி, கர்நாடக மாநிலம், மைசூருவை அடுத்த கூர்க் மலைவாசஸ்தலத்துக்கு சென்று தங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே, அவர்கள் புதுவை சொகுசு விடுதியில் தங்கியிருந்த தங்களது அறைகளை காலி செய்வதாக விடுதி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com