அதிமுக அரசு பெரும்பான்மைக்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நீட் தேர்வு வந்ததற்கு திமுகவும், காங்கிரஸூம்தான் காரணம் என வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீ.சீனிவாசன் தெரிவித்தார்.
அதிமுக அரசு பெரும்பான்மைக்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சேலம்:  நீட் தேர்வு வந்ததற்கு திமுகவும், காங்கிரஸூம்தான் காரணம் என வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீ.சீனிவாசன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம்,  பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாதையன், கடந்த செப்.5 ஆம் தேதி தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது,  உணவு தேடி வந்த கரடி தாக்கியதில் முகத்திலும்,  கையிலும் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து,  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே,  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாதையனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீ.சீனிவாசன்,  அவரது குடும்பத்தாரிடம் ரூ.59,100 இழப்பீடு தொகைக்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.

அப்போது,  அமைச்சர் திண்டுக்கல் சீ.சீனிவாசன் கூறியது: கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்த மாதையனின் மருத்துவ அறிக்கையில்  மிகவும் கடுமையாக காயப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதால்,  தமிழக முதல்வர் மூலம் ரூ.4 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும்,  அவரது குடும்பத்திற்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்க தமிழக அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜாக்டோ }ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்.

மேலும்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையைக் குறைத்ததைத் திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் சொல்லித்தான் நாங்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை. தமிழக முதல்வர் இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பார். நீட் தேர்வு வருவதற்கு திமுகவும்,  காங்கிரஸூம்தான் காரணம். தற்போது அவர்கள் போராடுகின்றனர். எல்லோரையும் போல் நாங்களும் எதிர்த்து வருகிறோம். இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது இருக்கிறது.

எந்தெந்த வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ,  அந்த வகையில் எல்லாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் பெரும்பான்மைக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளார். மற்றவர்களும் பெரும்பான்மைக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com