தமிழக உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது
தமிழக உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. 
இந்தத் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று கூறி உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். 
மேலும், 2016, டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்; குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 நிபந்தனைகளை அந்த உத்தரவில் தெரிவித்திருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையமும், மாநில அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. 
இந்நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். அதன் பிறகு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தத் தீர்ப்பானது உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என தீர்ப்பளித்தது.
கேவியட் மனு: இந்நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 'உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com