'நீட்' போராட்டம்: சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

'நீட்' தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில், சட்டம், ஒழுங்கைப் பராமரிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
'நீட்' போராட்டம்: சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

'நீட்' தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில், சட்டம், ஒழுங்கைப் பராமரிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) இணையாக, மாநில அரசின் பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புக்களுக்கான பாடத் திட்டத்தை மேம்படுத்தவும், தலித் மாணவி எஸ். அனிதாவின் தற்கொலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் ஜி.எஸ். மணி ஆஜராகி முன்வைத்த வாதம்:
சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி தமிழகத்தில் 2007-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது திமுக தலைவர் கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். இது தொடர்பாக அதிமுக தொடுத்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பந்த் உள்ளிட்டவற்றுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தற்போது நடைபெறும் போராட்டங்களால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்தப் போராட்டங்கள் 'நீட்' தேர்வுக்கு எதிராக மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் உள்ளன. எனவே, எந்தவிதப் போராட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. மேலும், தலித் மாணவி எஸ். அனிதாவின் தற்கொலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடர்பாக, எதிர் மனுதாரர்களுக்கு ( தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர்-உள்துறை) நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. மூன்றாவது எதிர் மனுதாரருக்கு (மத்திய அரசுக்கு) நோட்டீஸ் இல்லை. இது தொடர்பான உத்தரவின் நகலை தமிழக அரசின் வழக்குரைஞர் யோகேஷ் கன்னாவுக்கு அளிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது அவர் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும்.
இத்துடன், 'நீட்' தேர்வு தொடர்பாக தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க வேண்டியது தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் (உள்துறை) ஆகியோரது கடமையாகும். மேலும், 'பந்த்' போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் அல்லது சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கச் செய்பவர்கள் ஆகியோருக்கு எதிராக இடைக்கால நடவடிக்கையாக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும்.
அமைதியான போராட்டம் அல்லது விமர்சனம் அல்லது அபிப்ராய பேதம் கொள்வது என்பது வேறு; சட்டம், ஒழுங்கு பிரச்னையை உருவாக்குவது என்பது வேறு என்பதைத் தெளிவுப்படுத்துகிறோம். அமைதி வழியில் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அந்தப் போராட்டம் வன்முறைச் சூழலை உருவாக்கவிடக் கூடாது. மேலும், சட்டம், ஒழுங்குச் சூழலை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் இருக்கக் கூடாது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com