சூர்யாவுக்கு எதிராகக் கருத்துக் கூறிய தமிழிசைக்கு பாலபாரதியின் பதில்

நடிகர் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துக் கூறிய தமிழக பாஜகத் தலைவர் தமிழிசைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பால பாரதி பதிலளித்துள்ளார்.
சூர்யாவுக்கு எதிராகக் கருத்துக் கூறிய தமிழிசைக்கு பாலபாரதியின் பதில்


சென்னை: நடிகர் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துக் கூறிய தமிழக பாஜகத் தலைவர் தமிழிசைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பால பாரதி பதிலளித்துள்ளார்.

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கல்வி முறைக்கு எதிராகவும் நடிகர் சூர்யா கருத்துக் கூறியிருந்தார். 

நடிகர் சூர்யாவின் கருத்தை விமரிசனம் செய்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போது கல்வி குறித்துக் கருத்துக் கூறும் நடிகர், ஒரு சில கோடிகளுக்காக நடித்துக் கொண்டிருந்த போது, நாங்கள் தெருக்கோடிகளில் நின்று மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தோம். அவர் நடிகர், நான் மருத்துவர், மருத்துவக் கல்வி குறித்து யாருக்கு விமரிசனம் செய்ய தகுதி இருக்கிறது, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம் என்று கருத்துக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழிசையின் கருத்துக்கு முன்னாள் எம்எல்ஏ பால பாரதி கவிதை நடையில் பதிலளித்துள்ளார். 
அதில், 
சூர்யா கோடிகளை வாங்கிக் கொண்டு
நடிப்பதால் கட்டுரையே எழுதக் 
கூடாதென சட்டம் ஏதாவது 
நிறைவேற்றிவீட்டீர்களா தமிழிசை?

அதோ நீட்டை எதிர்த்து ஆசிரியர்
பணி துறந்துள்ளாரே சபரிமாலா
அவருக்கென்ன பதில் சொல்வீர்கள்?

இது ஒன்றும் செல்லாத நோட்டல்ல.
செல்லாமல் போவதற்கு!

அனிதாவும் சபரிமாலாவும் வேறல்ல,
சூர்யாவும் சபரிமாலாவும் வேறல்ல!
இது தொடர்போராட்டம்!
சமூக நீதிக்கான போராட்டம்!

இப்படித்தான் இருக்கும்,
பரவாயில்லை தெருக்கோடியிலிருந்தாவது
கவனியுங்கள்!... என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக, அனிதா மரணம் குறித்து விமரிசனம் செய்திருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்தது எப்படி என்பது குறித்து தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் பால பாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com