பொதுச் செயலராக சசிகலா நியமனம் ரத்து; ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு முழு அதிகாரம்

வி.கே. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுச் செயலராக சசிகலா நியமனம் ரத்து; ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு முழு அதிகாரம்


சென்னை: வி.கே. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மிக பரபரப்பான சூழ்நிலையில், பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி தொடங்கியது.

இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. 

அவற்றில், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் வி.கே. சசிகலாவின் பொதுச் செயலர் நியமனம் செல்லாது என்ற அறிவிப்பும், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதாவது, பொதுச் செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், பொதுச் செயலருக்கான அதிகாரங்கள் கட்சியின் ஒருங்கிணைப்புத் தலைவர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

ஒருங்கிணைப்புத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் வழிகாட்டும் குழு அமைக்கப்படும். அதிமுக வழிகாட்டுதல் குழுவில் 15 பேர் இடம்பெறுவார்கள். வழிகாட்டும் குழுவுக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருவரை கட்சியில் சேர்க்கவோ, நீக்கவோ எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் அளித்து பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கட்சி விதிகளில் மாற்றம் செய்ய வழிகாட்டும் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. மேலும், கட்சி விதி எண் 19ல் திருத்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலராக ஜெயலலிதாவே இருப்பார். கட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.  எனவே, இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் பொறுப்பு என்பது கிடையாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், பொதுச் செயலாளர் பதவி கிடையாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் செயல்பாடுவார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களின் முழு விவரம்: 

1. ஓரணியில் திரண்டதற்கு நன்றி, பாராட்டு.  இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு எதிர்வரும் தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்துடன் ஓரணியில் போட்டியிட முடிவு.

2. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அவரவர் பதவிகளில் நீடிப்பார்கள்.

3. எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வரும் அரசுக்கு பாராட்டு.

4. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.

5. வர்தா புயல் பாதிப்பின் போது மீட்புப் பணிகளையும், வறட்சியின்போது நிவாரணப் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

6 அதிமுக அரசை காப்பாற்றி சிறப்பாக நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு பாராட்டு.

7. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அவரது இடத்தை யாரும் நிரப்ப முடியாது. எனவே அவரே நிரந்தர பொதுச் செயலர். எனவே, இனி அதிமுகவில் பொதுச் செயலர் பொறுப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மூலம் வி.கே. சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட நியமனம் ரத்து செய்யப்படுகிறது.

8. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட துணைப் பொதுச் செயலர் பதவியும் நீக்கப்படுகிறது. அவரது நியமனங்கள் ரத்து

9. கட்சியின் கட்டுக்கோப்பை  சீர்குலைக்கும் வகையில் டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் செல்லாது.

10. தொண்டர்களின் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவி ஏற்படுத்துவோம்.

11. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

12. கட்சி விதிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com