அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் என்னவென்பது தெரியுமா?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரனை கட்சியில்
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் என்னவென்பது தெரியுமா?

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை (செப்.12) 10.35 மணிக்கு நடைபெற உள்ளது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழுவிற்கு 2,140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்குழு கூட்டத்தில் 296 பேர் பங்கேற்கவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் அழைக்கப்படவில்லை. அழைப்பிதழ்கள் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் உள்பட அவரது குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து நீக்குவது; ஓபிஎஸ்-ஈபிஎஸ்-க்கு கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் தீர்மானங்கள், அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓபிஎஸ்ஸை நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தீர்மானங்களை நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்தில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், காவிரி நதிநீர் விகாரம், தமிழக மீனவர்கள் பிரச்னை, நீட் தேர்வு குறித்து குறிப்பிடாமல் கல்வி முறை தொடர்பாக ஒரு தீர்மானமும், புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய தேர்தல் தேதி அறிவிப்பு என 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்நிலையில் பொதுக்குழு நடத்த தடை விதித்த பெங்களூரு உரிமையியல் நீதிமன்ற ஆணையின் நகலை அதிமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் ஆதரவு வழக்குரைஞர்கள் ஒட்டியுள்ளனர்.

கூட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு திங்கள்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிவேல் தரப்பில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளரான சசிகலாவுக்கே உண்டு. இந்நிலையில் செப்.12-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு நிர்வாகி என்ற பெயரில் உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக யாருக்குச் சொந்தம் என்ற விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்தக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

தடை விதிக்கக் கோரி தனிநபராக வந்தது ஏன் என்றும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழக்குத் தொடர்வது என்றால் தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது எனக் கூறிய நீதிபதி மனுதாரரின் மனுவில் நான்காவது எதிர்மனுதாரராக டிடிவி தினகரனையே சேர்த்துள்ளார். இது உள்நோக்கம் கொண்டது என்றும் மனுதாரர் விரும்பினால் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கூட்டத்துக்குச் செல்வதைத் தவிர்த்து விடலாம். எனவே, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாகக் கூறி நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு விசாரணை ராஜீவ் ஸக்தர், அப்துல் குத்தூஸ் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நேற்று திங்கள்கிழமை மாலை விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை இரவு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன், அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்கள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது எனத் தெரிவித்து வழக்கை வரும் அக்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

பொதுக்குழு நடைபெறுவதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொதுக்குழுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டுவதற்கு தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளது. இதையடுத்து முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலத்த சோதனைக்கு பிறகே பொதுக்குழு உறுப்பினர்கள் மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com