பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு -செயற்குழு கூட்டம் தொடக்கம்

பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி தொடங்கியது.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு -செயற்குழு கூட்டம் தொடக்கம்


சென்னை: பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி தொடங்கியது.

டிடிவி ஆதரவாளரும், அதிமுக தில்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்களில் 95% பேர் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ளவும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நேற்று முதலே...: வெளியூர்களில் இருப்பவர்கள் திங்கள்கிழமை இரவே வந்து சென்னையில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, வானகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், பூந்தமல்லி, நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தங்குவதற்கு அறைகளும், வீடுகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு பேருந்துகளை மாவட்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அமர்த்தியிருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 2 முதல் 3 பேருந்துகளில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டனர்.

முக்கிய தீர்மானங்கள்: சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, டிடிவி தினகரனின் நியமனமும், அவர் வெளியிட்ட அறிவிப்புகளும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. மேலும், சசிகலா நீக்கம் என்று இல்லாமல் புதிய பொதுச் செயலாளர் அல்லது கட்சியை நிர்வகிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் அளிப்பது போன்றவற்றுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கட்சியை வழிநடத்துவதற்கான குழுவுக்கு ஒப்புதல் பெறுவது, அந்தக் குழுவுக்கு நிர்வாகிகள் பெயர்களை அறிவிப்பது போன்றவை குறித்தும் தீர்மானங்கள் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.

கடும் போலீஸ் பாதுகாப்பு: முதல்வர் அறிவித்துள்ள கூட்டம் ஒருபுறம், அதற்கு செல்லக் கூடாது என்ற தினகரனின் தடை மறுபுறம் என இந்தக் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டத்தில் பிரச்னைகள் ஏதும் வந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைப் போக்குவரத்தில் யாரும் தடை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக கோயம்பேடு பகுதியில் இருந்து கூட்டம் நடைபெறும் வானகரம் வரை சாலை முழுவதும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com