எங்களுக்கு துரோகி பட்டம் சூட்ட என்ன தகுதி இருக்கிறது?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

எங்களுக்கு துரோகி பட்டம் சூட்ட டிடிவி தினகரனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
எங்களுக்கு துரோகி பட்டம் சூட்ட என்ன தகுதி இருக்கிறது?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

எங்களுக்கு துரோகி பட்டம் சூட்ட டிடிவி தினகரனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரை:
பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா, நடைபெறாதா என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. விசுவாசமிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவார்கள் என நீதிமன்றமே நமக்கு நீதி வழங்கியிருக்கிறது. முதல் வெற்றி நமக்கு இப்போது கிடைத்திருக்கிறது.
எவராக இருந்தாலும் கட்சியை உடைக்கவோ, மாற்றவோ முடியாது. இந்தக் கட்சியை அழித்து விடலாம், ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்றெல்லாம் நினைத்தனர். திமுக எவ்வளவோ பிரச்னைகளைத் தூண்டியது. அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இன்றைக்கு அற்புதமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாம்தான் வாரிசு: மறைந்த ஜெயலலிதாவுக்கு யாரும் வாரிசு கிடையாது. நாம்தான் வாரிசு. கட்சியையும், ஆட்சியையும் நம்மிடத்தில் ஒப்படைத்துள்ளார். அதைப் பேணிக் காக்க வேண்டும்.
வலிமைமிக்க இயக்கம் அதிமுக. ஆகவேதான் அத்தனை எதிர்க்கட்சிகளும் நம் மீது பாய்கிறார்கள். ஆகவே, எதிர்க்கட்சியினர் எவ்வளவு பாய்ந்தாலும், எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து மறைந்த ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றியே தீருவோம்.
யார் நீ?: டிவி தினகரன் யார்? 10 ஆண்டுகள் எங்கே போனார். வனவாசம் போயிருந்தார். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்தான் தினகரன். நம்மைப் பார்த்து துரோகி பட்டம் சூட்டுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? மறைந்த ஜெயலலிதாவின் செல்வாக்கால் இந்த ஆட்சியும், கட்சியும் உயர்ந்து நிற்கிறது.
அவர்களைப் போன்று (டிடிவி தினகரன்) துரோகிகள் யாரும் இல்லை. எவ்வளவோ சிரமத்தைக் கொடுத்தார்கள். ஜெயலலிதா அனைத்தையும் தாங்கிக் கொண்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திச் சென்றார்.
10 ஆண்டுகாலம் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் இன்றைக்கு கட்சிக்கும், ஆட்சிக்கும் உரிமை கொண்டாடுகிறார்கள். எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று கூறுகிறார்கள். அப்படிக் கூற என்ன தகுதி இருக்கிறது.
கட்சியை உடைக்கத் திட்டமிட்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நாள்தோறும் நீக்கல் பட்டியலை வெளியிடுகிறார் டிடிவி தினகரன். அவரே உறுப்பினர் இல்லை. இவர் எப்படி மற்றவர்களை நீக்க முடியும். முதலில் நீ உறுப்பினரா? 
உறுப்பினரே இல்லாத போது எப்படி நீக்க முடியும்? டிடிவி தினகரன் போன்று, ஓராயிரம் தினகரன் வந்தாலும் இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு தொண்டன் மீது கூட அவர்கள் கை வைக்க முடியாது.
இந்த ஆட்சி முறைப்படி தேர்தலில் வென்ற ஆட்சி. சட்டப் பேரவையில் நிரூபிக்கப்பட்ட ஆட்சி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தை நன்றியுடன் நினைத்து, கட்சி, ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com