சசிகலா நியமனம் ரத்து: அதிமுகவில் பொதுச் செயலாளர் பொறுப்பே இனி இல்லை

அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவதாக கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி. 
சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி. 

அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவதாக கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவரது நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பே இல்லை எனவும் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கட்சிப் பொறுப்புகள், கட்சியை வழிநடத்துவது போன்றவை குறித்து நான்கு முக்கிய தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது. எனவே, இனி அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பே இல்லை. அந்தப் பதவி ரத்து செய்யப்படுகிறது. அதற்கு ஏற்ப, அதிமுகவின் சட்டதிட்ட விதியில் திருத்தம் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தங்களை பொதுக்குழு ஏகமனதாக ஏற்று ஒப்புதல் அளிக்கிறது.
சசிகலா நியமனம் ரத்து: ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கவலையும் நிறைந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் பொதுக் குழு கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சியின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வி.கே.சசிகலா தாற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு வி.கே.சசிகலா கடந்த டிசம்பர் 30 முதல் பிப்ரவரி 15 வரையில் மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது என பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.
டிடிவி தினகரன் அறிவிப்பு செல்லாது: அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவரான டிடிவி தினகரன், கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதிதாக நியமிப்பது குறித்து வெளியிடும் எந்தவொரு அறிவிப்பும் செல்லாது. அவை கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு ஏற்புடையதும் அல்ல என்று பொதுக்குழு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் 2,130 பேர் பங்கேற்பு

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 2 ஆயிரத்து 130 பேர் பங்கேற்றதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் 2, 130 பேர் கலந்து கொண்டனர். அதாவது, 100-க்கு 98 சதவீதம் பேர் இங்கு வந்திருக்கின்றனர் என்றார்.
மாவட்டச் செயலாளர்கள்: பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மாவட்டச் செயலாளர்களின் கண்காணிப்புடன் அழைத்து வரப்பட்டனர். 
அனைவரும் பேருந்துகளில் வந்தனர். அதிமுக அமைப்பு ரீதியாக 50 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 
அதில், 46 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொதுக் குழு தீர்மானங்கள் என்னென்ன?
* நிர்வாக பொறுப்புகளை ஏற்கும் ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி கே.பழனிசாமி) ஆகியோருக்கு நிர்வாக அதிகாரங்களை அளிப்பது.
* ஓரணியில் திரண்டதற்கு அங்கீகாரமும், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்து தேர்தல்கள் அனைத்திலும் மகத்தான வெற்றி காண உழைப்போம்.
* ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களும், தேர்தல்கள் வழியாக தேர்வு செய்யப்பட்டோரும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவர்.
* எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் அரசுக்கு பாராட்டு, நன்றி.
* ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி.
* வறட்சி நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றி.
* அரசையும், கட்சியையும் வழிநடத்திச் செல்லும் நிர்வாகிகளுக்குப் பாராட்டு.
* அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ரத்து.
தாற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியும், அவர் அறிவித்த நியமனங்களும் ரத்து.
* டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் செல்லாது.
* அதிமுகவை வழிநடத்த புதிய பதவிகள் ஏற்படுத்துதல்.
* சட்டதிட்ட விதிகளில் செய்யப்படும் மாற்றங்கள், திருத்தங்களுக்கு ஒருமனதாக ஒப்புதல் பெறப்படுதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com