டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் பேரவைத் தலைவரை இன்று சந்திப்பார்களா?

பேரவைத் தலைவர் பி.தனபாலை நேரில் சந்தித்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் வியாழக்கிழமை (செப். 14) விளக்கம் அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேரவைத் தலைவர் பி.தனபாலை நேரில் சந்தித்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் வியாழக்கிழமை (செப். 14) விளக்கம் அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு நேரில் விளக்கம் அளிக்காத பட்சத்தில் 18 எம்எல்ஏ.-க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளன.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்றக் கோரி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. -க்கள் 19 பேர் கடிதம் அளித்தனர். மேலும், சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் டிடிவி தினகரன் தலைமையில் எம்.எல்.ஏ.-க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். 
விளக்கம் அளிக்க நோட்டீஸ்: முதல்வர் பழனிசாமியை நீக்கக் கோரிய டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸþக்கு இடைக்கால பதிலை 19 எம்.எல்.ஏ.-க்களும் அளித்தனர். மேலும், விளக்கம் அளிக்க 15 நாள்கள் அவகாசம் வேண்டுமென டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த பேரவைத் தலைவர் தனபால், செப்டம்பர் 14 -ஆம் தேதிக்குள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, டிடிவி ஆதரவு அணியில் இருந்த எம்.எல்.ஏ. ஜக்கையன், தனது ஆதரவை முதல்வர் பழனிசாமிக்கு தெரிவித்தார்.
இன்று கெடு முடிவு: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுக்கு பேரவைத் தலைவர் விதித்த கெடு வியாழக்கிழமையுடன் (செப். 14) முடிவடைகிறது. இதையடுத்து, 18 எம்.எல்.ஏ.-க்களில் (ஜக்கையன் தவிர்த்து) எத்தனை பேர் நேரில் வந்து விளக்கம் அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேரவைச் செயலக அதிகாரிகள் கூறியதாவது: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் நேரில் வந்தே விளக்கம் அளிக்க வேண்டுமென பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். எனவே, டிடிவிக்கு ஆதரவு தெரிவிக்கும் 18 பேரும் நேரில் வருவது அவசியமாகும். அப்படி வரத் தவறினால் அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பதை பேரவைத் தலைவரே முடிவு செய்வார். வியாழக்கிழமை ஒரு நாள் அவகாசம் இருப்பதால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்களின் நிலைப்பாட்டைப் பொருத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை பேரவைச் செயலகம் மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருவார்களா?: கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எத்தனை பேர் தங்களது விளக்கத்தை அளிக்க நேரில் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
அவர்கள் வந்து தங்களது பதிலை அளிக்கும்பட்சத்தில் இந்தப் பிரச்னை அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் மீது எத்தகைய நடவடிக்கையை பேரவைத் தலைவர் தனபால் எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com