பசுமைத் தீர்ப்பாயங்கள் அனைத்தையும் மூட மத்திய அரசு திட்டம்: வைகோ குற்றச்சாட்டு

பெரு நிறுவனங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் பசுமைத் தீர்ப்பாயங்களை மூடிவிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

பெரு நிறுவனங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் பசுமைத் தீர்ப்பாயங்களை மூடிவிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. பாசன விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் வைகோ ஆஜராகி வாதாடினார். 
இந்த வழக்கில் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும், தமிழக அரசும் தங்கள் தரப்பு பிரமாண வாக்குமூலங்களை இரண்டு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் உள்ள பசுமைத் தீர்ப்பாயங்களை நிரந்தரமாக மூடிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாகவே, பசுமைத் தீர்ப்பாயத்துக்கு நியமிக்க வேண்டிய நிபுணர் குழு உறுப்பினரை இன்னும் நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மக்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் சிறந்த முறையில் சேவை செய்து வரும் பசுமைத் தீர்ப்பாயங்களை எல்லாம் மூடிவிட்டு, தங்கள் விருப்பம்போல் பெரு நிறுவனங்கள், நாட்டின் செல்வங்களை கொள்ளை அடிக்கவும், சுற்றுச்சூழலை நாசமாக்கவும் மறைமுகமாக பாதை வகுத்துக் கொடுப்பதே மத்திய அரசின் திட்டம். இதை எதிர்த்து மதிமுக நிச்சயம் போராடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com