புதுவையில் விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 770 மருத்துவ மாணவர்களை வெளியேற்ற உத்தரவு

2016-17ஆம் ஆண்டில் சென்டாக் மூலம் அல்லாமல், விதிகளை மீறி நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 770 மாணவ, மாணவிகளை 2 வாரங்களில் வெளியேற்ற வேண்டும்

2016-17ஆம் ஆண்டில் சென்டாக் மூலம் அல்லாமல், விதிகளை மீறி நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 770 மாணவ, மாணவிகளை 2 வாரங்களில் வெளியேற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 4 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள், 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 2016-17ஆம் ஆண்டு மொத்தம் 1050 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன.
இந்த இடங்கள் நீட் தேர்வின் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு புதுச்சேரி அரசு விலக்கு பெற்றிருந்தது. இதனால், அரசு இட ஒதுக்கீடாக பெறப்பட்ட 283 இடங்கள் மட்டும் பிளஸ்-2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டன. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட வேண்டிய 770 இடங்களும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பாததுடன், 30.09.2016-க்குள் சேர்க்க வேண்டும் என்ற மருத்துவ கவுன்சில் விதிமுறையையும் மீறி சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து புதுச்சேரி மாணவர், பெற்றோர் சங்கம் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பியது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மருத்துவ கவுன்சில் கடந்த 7-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து, புதுச்சேரி தலைமைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநருக்கும் அனுப்பியுள்ளது.
அதில், 2016-17ஆம் ஆண்டில் சென்டாக் மூலம் அல்லாமலும், 30.09.16ஆம் தேதிக்குப் பின்னரும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களை இரண்டு வார காலத்திற்குள் வெளியேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை அறிந்த நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com