மகனை வெளியே கொண்டு வந்து காட்டுகிறேன் என தஷ்வந்தின் தந்தை சவால்: ஹாசினியின் தந்தை பகீர் தகவல்

எனது மகனை வெளியே கொண்டு வந்து காட்டுகிறேன் என்று குற்றவாளியின் தந்தை என்னிடம் சவால் விட்டுள்ளார் என பலாத்காரத்துக்கு உள்ளாகி கொல்லப்பட்ட ஹாசினியின் தந்தை பாபு கூறியுள்ளார்.
மகனை வெளியே கொண்டு வந்து காட்டுகிறேன் என தஷ்வந்தின் தந்தை சவால்: ஹாசினியின் தந்தை பகீர் தகவல்


சென்னை: எனது மகனை வெளியே கொண்டு வந்து காட்டுகிறேன் என்று குற்றவாளியின் தந்தை என்னிடம் சவால் விட்டுள்ளார் என பலாத்காரத்துக்கு உள்ளாகி கொல்லப்பட்ட ஹாசினியின் தந்தை பாபு கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி முகலிவாக்கத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டான்.

கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த்தின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை தொடர்ந்த வழக்கில், காவல்துறை உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து, தஷ்வந்த் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அதிர்ச்சி அடைந்த ஹாசினியின் தந்தை பாபு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளது. என் மகளை கொன்றவன் வெளியே வந்தால் பலரை கொல்லவும் தயங்க மாட்டான். அவன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது.

என் மகள் மரணத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் என் மனைவி வெளியே வரவில்லை. குற்றவாளியால் மற்றொரு குழந்தை பாதிக்கப்படலாம். அவன் உயிர் வாழவேக் கூடாது. அவனுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

குற்றவாளியின் தந்தை, என்னிடம் சவால் விட்டுள்ளார், என் மகனை வெளியே கொண்டு வருவேன் என்று சவால் விடுத்துள்ளார். இதற்கு எதிராக இறங்கிப் போராடத் தயார். ஆனால், என் குடும்பத்தின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்று பாபு கலங்கிய மனதோடு கேள்வி எழுப்புகிறார்.

மேலும் அவர் கூறுகையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு மிக மோசமானது. தினமும் அழுது கொண்டிருக்கிறேன். நீதித்துறை மூலம் நீதி கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இதுபோன்ற தீர்ப்புகளால் சட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள். என் குழந்தைக்கு நடந்த கொடூரம் மற்றொரு குழந்தைக்கு நடக்கக் கூடாது. 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்து என்ன பலன்? என்றும் அவர் நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com