மின்துறை அமைச்சருடன் இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு சென்று புதுவை முதல்வர் நாராயணசாமி 3 மணி நேரம் ஆய்வு

புதுவை நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை என பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததால் மின்துறை அமைச்சர் கமலக்கண்ணனுடன்
மின்துறை அமைச்சருடன் இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு சென்று புதுவை முதல்வர் நாராயணசாமி 3 மணி நேரம் ஆய்வு

புதுவை நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை என பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததால் மின்துறை அமைச்சர் கமலக்கண்ணனுடன், முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்று 3 மணி நேரம் ஆய்வு செய்தார்.

நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறை அதிகாரிகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆய்வை தொடங்கிய அவர், முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, கதிர்காமம், தட்டாஞ்சாவடி, ஊசுடு, மேட்டுப்பாளையம், மூலகுளம், உழவர்கரை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 20 கி.மீ தூரம் 3 மணி நேரமாக இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செல்லும் வழியில் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
தெருவிளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 சதவீத மின் விளக்குகள் எரிகின்றன. மீதம் 20 சதவீதம் மட்டும் விளக்குகளே எரியாமல் உள்ளன.

இதனால் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. எனவே மின்விளக்குகளை சரிசெய்து பயப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் அனைத்து தெருவிளக்குகளும் எல்இடி விளக்குகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்தகட்டமாக புதுச்சேரியின் கிராமப்பகுதிகளிலும் இதே போல் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது என்றார்.

ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரவு நேரத்தில் புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளில் அதிகாரிகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com