அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவேன்: கமல்ஹாசன் பேட்டி

எந்த அரசியல் கட்சியின் கொள்கையுடனும் எனது சிந்தனைகள் ஒத்துப்போகததால் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவேன்
அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தொடங்குவேன்: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: எந்த அரசியல் கட்சியின் கொள்கையுடனும் எனது சிந்தனைகள் ஒத்துப்போகததால் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசும் மற்றும் அரசியல் தலைவர்களையும் சமூக ஊடகங்கள் மூலம் விமர்சனம் செய்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சியின் நேரிடையாக களத்திற்கு வந்து மக்களை சந்தியுங்கள் என்று சவால் விடுத்தனர்.

இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் அண்மையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தேன். உடனே கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஒரு கட்சியில் இணைவது என்பது நம்பிக்கை கொள்வது, தப்புவது, தாவுவது போன்ற எளிய காரியமல்ல. என்னுடைய அரசியல் இலக்குகளை இப்போதுள்ள கட்சிகள் நிறைவு செய்யவில்லை. எந்த கட்சியிலும் சேரும் எண்ணமும் எனக்கு இல்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சித்தாந்தமும், சிந்தனைகளும் ஒத்துப்போகவில்லை.

அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாற்றத்தை கொண்டு வர சிறிது தாமதம் ஆகலாம்.

அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால்  தனிக்கட்சி தான் தொடங்குவேன். மாற்றத்தை நான் முன்னெடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள்.

சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வெளியேற்றியது மாற்றத்திற்கான வலிமையான நடவடிக்கை என்றுதான் நான் பார்க்கிறேன். ஆனால் இது ஒரு தொடக்கம்தான். தமிழக அரசியல் மாறி வருகிறது என்ற எனது நம்பிக்கைக்கு இது உரம் சேர்க்கிறது. இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்ய முடியும். எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை, நான் மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கிறேன் என்றார்.

இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. இதில் மாற்றம் வரவேண்டும். ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மேலும், 5 வருடத்திற்கு வாக்களித்து தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயல் படாவிட்டால் மீண்டும் என்னை நீக்குவதற்காக 5 வருடங்கள் காத்திருந்து வாக்களித்து மாற்றும் நிலை இருக்க கூடாது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் உடனடியாக அவர்களை நீக்கும் நிலை வரவேண்டும். புதிய மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும்.

ஆமாம். நான் சந்தர்ப்பவாதிதான். ஏனென்றால் அடுத்த வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால் முதலில் என் வீட்டை நான் சுத்தப்படுத்த வேண்டும். இதுதான் என் எண்ணம். சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. நான் தோற்றுவிடக்கூடும் என சிலர் எச்சரிக்கிறார்கள். ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது. இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது என்று ஆவேசமாக பேசிய கமல்ஹாசன் அரசியல் வருகையை உறுதிசெய்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com