எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு? தமிழக மழை நிலவரம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்பது குறித்த முழு தகவல்களையும் அறியலாம்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு? தமிழக மழை நிலவரம்


சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்பது குறித்த முழு தகவல்களையும் அறியலாம்.

தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தனது பேஸ்புக்கில் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தகவல்களை அளித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், சென்னையில் 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை களைக்கட்டப் போகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செப்டம்பர் 16 - 20ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னைக்கான வானிலை அறிவிப்பு
மாலை அல்லது இரவு நேரங்களில் குறிப்பாக நள்ளிரவில் சென்னையில் கடந்த 10 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் இந்த செப்டம்பர், ஒரு சிறப்பான மாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நேற்று முதல் தரைக்காற்று பலமடைந்து வருகிறது. வேலூர் பகுதியில் மேகக் கூட்டங்கள் உருவானதையும் பார்க்க முடிந்தது. இன்றும் அதே போல வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் மேகக் கூட்டங்கள் உருவாகும். அந்த மேகக் கூட்டங்களின் பாதையில் சென்னை இருப்பதால் நிச்சயம் மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்கு சென்னையில் மழை வாய்ப்பு இருந்தாலும், மறுபக்கத்தில் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் பருவமழை சூடுபிடித்தால், சென்னையில் பெய்யும் மழையின் அளவு குறைந்துவிடும்.

வால்பாறை, நீலகிரி, தேனி பகுதிகளிலும், கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளிலும் செப்டம்பர் 17-18ம் தேதிகளில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நீலகிரி, வால்பாறை, நெல்லையின் செங்கோட்டை, குற்றாலம், பாபநாசம் அணை, பெரியார் பகுதி, ஈரோடு மாவட்டத்தில் சத்யமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 3 நாட்களுக்கு மிக அதிகக் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகே பொள்ளாச்சிப் பகுதி, உடுமலைப்பேட்டை, பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள திருப்பூர், ஈரோடு, கோவை நகரங்களிலும் மழை பெய்யலாம். சேலம், மதுரை, கரூர், விருதுநகர் பகுதிகளில் வரும் நாட்களில் ஒரு நாள் மட்டும் மிதமான மழை பெய்யும். கிருஷ்ணகிரி, வேலூர் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com