பேரவைத் தலைவரிடம் நேரில் விளக்கமளிக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் நிபந்தனை

கர்நாடக போலீஸ் தங்களுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே, பேரவைத் தலைவரிடம் நேரில் வந்து விளக்கமளிப்போம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

கர்நாடக போலீஸ் தங்களுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே, பேரவைத் தலைவரிடம் நேரில் வந்து விளக்கமளிப்போம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நீக்கக் கோரி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர், கடந்த 22 -ஆம் தேதி கடிதம் அளித்தனர். இந்தக் கடிதம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென 19 பேருக்கும் பேரவைத் தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த நோட்டீஸ் குறித்து கடந்த 5 -ஆம் தேதி, 19 எம்.எல்.ஏ.,க்களும் தங்களது இடைக்கால பதிலைத் தெரிவித்தனர். இதனிடையே, 19 பேரில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.டி.கே.ஜக்கையன் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை 18-ஆகக் குறைந்தது. அவர்கள் அனைவரும் செப்டம்பர் 14 -ஆம் தேதிக்குள் உரிய பதிலைத் தெரிவிக்க வேண்டுமென பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்திருந்தார்.
வழக்குரைஞருடன் பதில்: இந்த நிலையில், 18 பேரும் வியாழக்கிழமை நேரில் ஆஜராகவில்லை. டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்களில் ஒருவரான வெற்றிவேலும், அவரது வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் பேரவைத் தலைவர் பி.தனபாலைச் சந்திக்க காலை 11 மணிக்கு வந்தனர். பிற்பகல் 3 மணி வரை பேரவைத் தலைவரை அவர்கள் சந்தித்து பேசினர்.
அதன்பின், தலைமைச் செயலக வளாகத்தில், எம்.எல்.ஏ., வெற்றிவேல், வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
18 எம்.எல்.ஏ.-க்கள் சார்பாக பேரவைத் தலைவரைச் சந்தித்து இடைக்கால பதிலைக் கொடுத்துள்ளோம். எந்தச் சூழலில், எந்த அடிப்படையில் ஆளுநரிடம் கடிதம் அளித்தோம் என்பதற்கான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். கடந்த 21 -ஆம் தேதி கட்சித் தலைமை கூறியதன் அடிப்படையில் ஆளுநரிடம் கடிதம் அளித்தோம். மேலும் பதிலளிப்பது தொடர்பாக சில ஆவணங்களைக் கேட்டுள்ளோம். அதனைக் கொடுத்த பிறகே உரிய பதிலை தனிப்பட்ட முறையில் சென்று அளிப்போம்.
நேரில் ஆஜராகாதது ஏன்? : தகுதி நீக்கம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கர்நாடகத்தில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.-க்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படியான விஷயங்களை நம்புகிறோம்.
நாங்கள் விதிமீறல் எதும் செய்யவில்லை. எனது (ராஜா செந்தூர்பாண்டியன்) கட்சிக்காரர்கள் யாரும் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை. கட்சியை விட்டுப் போகவில்லை. கட்சிக்கு கட்டுப்பட்டே முடிவை எடுத்துள்ளனர்.
நேரில் வந்து விளக்கமே தர மாட்டோம் எனத் தெரிவிக்கவில்லை. இறுதி விசாரணைக்கு நேரில் வருவோம் எனத் தெரிவித்துள்ளோம். ஆனால், அதற்கு போலீஸ் பாதுகாப்பு, அதுவும் கர்நாடக போலீஸ் பாதுகாப்பு வேண்டும். அத்தகைய பாதுகாப்பு கிடைத்தால் நேரில் வந்து பதிலளிப்போம்.
"போதிய பாதுகாப்பு இல்லாவிட்டால், அதுகுறித்து மனுவாகக் கொடுத்தால் பரிசீலிப்படும்' என பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார்.
எங்களது தரப்பு நியாயத்தை வெளிப்படுவத்துற்கான வாய்ப்பை 18 பேரும் கேட்டுள்ளனர். அது அவர்களது சட்டப்படியான உரிமை. அதற்குரிய விளக்கத்தை மனுவாகக் கொடுத்துள்ளோம் என்றார் ராஜா செந்தூர்பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com