191 சிறைக்காவலர்களுக்கு பதவி உயர்வு, விருப்ப பணியிட மாற்றம்

தமிழக சிறைத்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் 191 பேருக்கு பதவி உயர்வும், விருப்பப் பணியிட மாற்றமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சிறைத்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் 191 பேருக்கு பதவி உயர்வும், விருப்பப் பணியிட மாற்றமும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழக சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறைத்துறையினருக்கான பணியிட மாற்ற கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டத்துக்கு கூடுதல் காவல்துறை இயக்குநரும், சிறைத்துறை தலைவருமான சைலேந்திரபாபு தலைமை வகித்தார். புழல் மத்திய சிறைத்துறை துணை த் தலைவரும், சிறைக் கண்காணிப்பாளருமான ஆ.முருகேசன், நிர்வாக அலுவலர் நாமதுரை ஆகியோர் கொண்ட பணி மாறுதல் குழுவினர் பங்கேற்றனர்.
இதில், சிறைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 191 இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு முதல் நிலைக் காவலர்களாக பதவி உயர்வும், பணியிட மாற்றமும் வழங்கப்பட்டது.
அதன்படி, புழல் மத்திய சிறை 1-க்கு 19 காவலர்களும், புழல் மத்திய சிறை 2-க்கு-5, வேலூர் மத்திய சிறைக்கு 51, கடலூர் மத்திய சிறைக்கு 27, திருச்சி மத்திய சிறைக்கு 12, சேலம் மத்திய சிறைக்கு 45, கோவை மத்திய சிறைக்கு 32 காவலர்கள் என 191 காவலர்களுக்கு பதவி உயர்வும், பணியிட மாற்றமும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பணிமாறுதல் கலந்தாய்வில், முதல்நிலை காவலர்கள் 218 பேரில், புழல் மத்திய சிறை 1-க்கு 5 காவலர்களும், புழல் மத்திய சிறை 2-க்கு 14, வேலூர் மத்திய சிறைக்கு 6, கடலூர் மத்திய சிறைக்கு 15 , திருச்சி மத்திய சிறைக்கு 44, சேலம் மத்திய சிறைக்கு 19, கோவை மத்திய சிறைக்கு 7, மதுரை மத்திய சிறைக்கு 54, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு 41, புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளிக்கு 13 காவலர்களுக்கு விருப்பப் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது.
சிறைத்துறைத் தலைவராக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பின்னர், களப்பணியாளர்களுக்கு பணியிட மாறுதல், பதவிஉயர்வின்போது, பணியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதலும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் மூலம் களப்பணியாளர்கள் தங்களது சொந்த ஊர் அல்லது சொந்த ஊருக்கு அருகாமையில் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். சிறைத்துறை வரலாற்றில் முதன்முதலாக விருப்பப் பணியிட மாற்றமும், தகுந்த பதவி உயர்வும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக களப்பணியாளர்களும், காவலர்களும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com