ஒரு வாரத்தில் இரட்டை இலை சின்னம்: ஓபிஎஸ் நம்பிக்கை

இரட்டை இலை சின்னத்தை இன்னும் ஒரு வாரத்தில் பெற்று விடுவோம் என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். உடன், அதிமுக பிரமுகர்கள்.
காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். உடன், அதிமுக பிரமுகர்கள்.

இரட்டை இலை சின்னத்தை இன்னும் ஒரு வாரத்தில் பெற்று விடுவோம் என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
காஞ்சிபுரம் தேரடி வீதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காஞ்சி மாநகருக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. ஒன்று உலகப் பிரசித்தி பெற்ற பட்டு, மற்றொன்று அண்ணா பிறந்த மண். பிறந்தோரெல்லாம் உயர்ந்தோரில்லை. உயர்ந்தோரெல்லாம் சிறந்தோர் ஆவதில்லை. உயர்ந்தும் சிறந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழ்ந்து வருபவர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே.
27 ஆண்டு காலம் அதிமுகவுக்கு வந்த வேதனை, சோதனைகளைக் கடந்து, சதி திட்டங்களை முறியடித்தவர் ஜெயலலிதா. அதுபோல், தொடக்கத்தில், 17 லட்சமாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1.5 கோடியாக மாற்றினார். ஆட்சி, கட்சியை மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்றவர் ஜெயலலிதா. இன்று அவர் இல்லை. ஆனால், கட்சிக்கு யார் உறுதுணையாக உள்ளார்கள், துரோகம் செய்கிறார்கள் என்று அவர் ஆன்மா பார்த்துக் கொண்டிருக்கிறது.
அவர் இந்த இயக்கத்தை இதுவரை தொண்டர்களின் கட்சியாகத்தான் வளர்த்தார்.
தவறி கூட குடும்ப உறுப்பினர்களுக்கு அதிமுகவில் அரசியல் பதவிகளை அளிக்கவில்லை. இதற்கு எதிராக இரும்புப் பிடி போல் கட்சி, ஆட்சியை சிலர் வைத்திருந்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, இந்த கட்சி, குடும்பத்துக்குள் சிக்கிவிடக் கூடாது என இரு அணிகளாகப் பிரிந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் என்ன நினைத்து அதிமுகவை வளர்த்தார்களோ, உருவாக்கினார்களோ அந்த நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளது.
அதிமுகவின் ஒற்றுமை, உறுதித்தன்மையைப் பார்த்து எதிர்க்கட்சிகள் கதி கலங்கியுள்ளன.
உறுதியாக இன்னும் ஒரு வாரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைத்து விடும். இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எடுக்கும் எந்த முயற்சியும் பலிக்காது. எடப்பாடி பழனிசாமி அரசு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நல்லமுறையில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இனிமேல் எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். மக்களவைக்கு 37 உறுப்பினர்களைப் பெற்று, நாட்டிலேயே 3-ஆவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது அதிமுக. எனவே கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்,எம்எல்ஏ கே.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடிகர் ஆர்.ராமராஜன் சிறப்புரையாற்றினார்.
அமைப்புச் செயலர் மைதிலி திருநாவுக்கரசு, எம்.பி. மரகதம் குமரவேல் மற்றும் பெருந்திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அண்ணா நினைவு இல்லத்தில்...: முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அண்ணா நினைவு இல்லத்துக்குச் சென்று அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com