ஓய்வூதிய திட்டத்தில் தன் பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏனென்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
ஓய்வூதிய திட்டத்தில் தன் பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏனென்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி என்.கிருபாகரன், அரசுப்பள்ளிஆசிரியர்களின் போராட்டத்தைக் கடுமையாக கண்டித்து 12 கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், "இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 42 ஆயிரம் வரை வழங்கப்படுவதாகவும், 30 வருடம் அனுபவமுள்ள தலைமை ஆசிரயர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 91ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன் பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தின்படி, அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன், எத்தனை அரசு ஊழியர்களுக்கு அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்படாமல் உள்ளது, எப்போது செலுத்தப்படும், இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இந்த வழக்கில் நிதித் துறை முதன்மை செயலாளரையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்துள்ளது. எனவே ஓய்வூதியம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக வரும் திங்கள்கிழமை (செப்.18) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
சமூக வலைதள பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு: அப்போது ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்குரைஞர்கள் என்.செந்தில்குமார், ஜி.சங்கரன், ஏ.பி.சூர்யபிரகாசம் ஆகியோர் நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக முறையிட்டனர்.
"நீதிபதிகள் மீது கட்டுப்பாடில்லாமல் தரக்குறைவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவேற்றம் செய்கின்றனர். இதை கட்டுப்படுத்த சென்னை காவல் ஆணையரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர் அவர்கள்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்குரைஞர், "இந்த குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதனையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், "நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். தலைக்கவசம் கட்டாயம் என நான் உத்தரவு பிறப்பித்தபோது, அதை விமர்சித்து பல கடிதங்கள் வந்தன. அவற்றில் 80 சதவீதம் எதிர்மறையானவை. சில கடிதங்களில், "உங்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியுமா, குண்டும் குழியுமான சாலைகளில் பயணித்திருக்கிறீர்களா?' என்றெல்லாம்கூட விமர்சித்திருந்தார்கள்.
எனவே தற்போதைய சமூக வலைதள விமர்சனங்களுக்கானஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள்' என முறையீடு செய்த வழக்குரைஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com