சென்னை உயர் நீதிமன்றம் பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்து கொண்ட முதல்வர் பழனிசாமி

சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம் பற்றிய அரிய தகவல்களை முதல்வர் பழனிசாமி இன்று தனது உரையின் போது பகிர்ந்து கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்து கொண்ட முதல்வர் பழனிசாமி


சென்னை: சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம் பற்றிய அரிய தகவல்களை முதல்வர் பழனிசாமி இன்று தனது உரையின் போது பகிர்ந்து கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தின் 125வது ஆண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, சென்னை உயர்நீதிமன்ற பாரம்பரிய கட்டடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நீதி என்பது மக்களுக்கு  அரசியலமைப்பு சாசனம் அளிக்கும் உரிமை. பொதுமக்கள் நம்பிக்கையின் இருப்பிடம் நீதித்துறை. நமது நாட்டின் நீதி முறைகள் உலகத்திலேயே பழமையானவை. அதுமட்டுமல்லாமல் அது ஒருவரால் ஒரே நாளில் உருவாக்கப்பட்டது அல்ல.

எண்ணற்ற திட்டங்கள், தலைமுறை தலைமுறையாக மக்களிடம் காணப்பட்ட பொறுமை ஆகியவற்றை மூலதனமாக கொண்டு தெளிவான திட்டமிடுதலாலும், பலரின் பெருமுயற்சியினாலும் ஏற்பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் இயங்கிய சட்ட அமைப்புகளால் உருவான நன்முறைகளை உள்வாங்கி இத்துறையானது தன்னைத்தானே மாற்றிக் கொண்டு வளர்ந்து வருகிறது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்‘The Indian High Courts Act 1861’ அதாவது இந்திய உயர்நீதிமன்றங்களின் சட்டம் 1861 என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, விக்டோரியா மகாராணியால் வெளியிடப்பட்ட சாசனத்தின் அடிப்படையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 1862 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இந்த உயர்நீதிமன்றம் ஆந்திரா, கேரளா பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்ததால் அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்ஸி முழுமைக்கும் இது High Court of Judicature at Madras என உயர்நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தை குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.

தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற கட்டடத்துக்கு முன் உள்ள கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றம் இயங்கி வந்தது.

பின்னர் விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்புதான் தற்போதைய உயர்நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் இந்தோ-சார்செனிக் முறையில் 1892 ல் ஹென்றி இர்வின் என்பவரின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது.

இந்தக் கட்டடம் 1892 ஆம் ஆண்டு ஜுலை 12 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம்தான் மிகச் சிறந்தது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கட்டடக்கலையின் சிறந்த உதாரணமாக இந்தக் கட்டடம் திகழ்கிறது. அழகான வண்ணம் தீட்டப்பட்ட கட்டடத்தின் கூரைகளும் வண்ணக் கண்ணாடிகள் பொதிந்த கதவுகளும் மிக்க கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக்கம் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்தக் கலங்கரை விளக்கம் மெரினா கடற்கரைக்கு மாற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் பாரபட்சமின்றி நீதி வழங்கும் அமைப்பாக இன்று வரை செயல்பட்டுக் கொண்டு வருவது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். நீதியின் வரலாறு, கட்டடக்கலை, சட்ட சாஸ்திரங்களின் பாரம்பரியம் என்ற மூன்று பெருமைகளை உள்ளடக்கியது சென்னை உயர்நீதிமன்றம் என்றால் அது மிகையாகாது. 

இந்திய அரசியலமைப்பில் நீதித்துறை, ஆட்சித்துறை, சட்டமன்றம் ஆகிய மூன்றும் தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழமுடியும்.

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை இம்மூன்று பிரிவுகளும் சுதந்திரமாக செயல்படுகின்றன என்பதை நான் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவாக நீதி கிடைக்கச் செய்வதைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நீதிமன்றங்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வு கொண்ட அரசாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் அம்மா அரசும் செயல்பட்டு வருகிறது என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நீதித்துறையின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வுள்ள அரசாக தமிழக அரசு தொடர்ந்து செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்று சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த இனிய நன்னாளில், இவ்வரசு சிறப்புமிக்க விழாவில் கலந்து கொள்வதில் நான் பாக்கியமாக பெருமையாக கருதி விடைபெறுகிறேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com