புதுவை நகராட்சி எல்லையில் மீண்டும் மதுக் கடைகளைத் திறக்க அனுமதி

நகராட்சி , மாநகராட்சிப் பகுதிகளின் சாலையோரங்களில் மதுக் கடைகளைத் திறக்க எந்தத் தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து,
புதுவை நகராட்சி எல்லையில் மீண்டும் மதுக் கடைகளைத் திறக்க அனுமதி

நகராட்சி , மாநகராட்சிப் பகுதிகளின் சாலையோரங்களில் மதுக் கடைகளைத் திறக்க எந்தத் தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து, புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் மீண்டும் மதுக் கடைகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலையோரங்களில் மதுபானக் கடைகளை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்தது. இதையடுத்து, கடந்த மார்ச் 31 - ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழகத்தில் நெடுஞ்சாலையோரங்களில் இயங்கி வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக் கடைகள் உடனடியாக மூடப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் புதுவையில் 163 மதுக் கடைகள் மூடப்பட்டன. தொடர் உரிமம் இருந்த கடைகள் வேறு சில பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. இதை எதிர்த்து பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிரப் போராட்டங்களும் நடைபெற்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவால் புதுவைக்கு ரூ. 250 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், நெடுஞ்சாலையோரங்களில் மதுக் கடைகள் மூடுவது தொடர்பான ஆணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. 

இதையடுத்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் மதுக் கடைகள், பார்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தையடுத்து, தமிழகத்தில் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த மதுக் கடைகள், பார்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

நகர, மாநகர எல்லைக்கு அப்பாற்பட்ட நெடுஞ்சாலையோரங்களில் மதுக் கடைகள், பார்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுவையில் நகராட்சிப் பகுதிகளில் மதுக் கடைகள், பார்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிக்கையை மாநில அரசு வெளியிட்டது. 

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே மதுக் கடைகள் இருந்த அதே இடங்களில் மீண்டும் மதுக் கடைகளைத் திறக்க ஏதுவாக அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை கலால் துறைத் துணை ஆணையர் ஜான்சன் வெளியிட்டார்.

நகராட்சிப் பகுதிகளில் சுற்றுலா பிரிவின் கீழும், இதர மது உரிமம் பெற்ற நிறுவனங்கள் மீண்டும் அதே இடங்களில் மதுக் கடைகளைத் திறக்கலாம்.

மேலும், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட மதுக் கடைகளின் உரிமதாரர்கள் விரும்பினால் மீண்டும் பழைய இடங்களுக்கு மாறிக் கொள்ளலாம். அனைவரும் புதுச்சேரி கலால் சட்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நெடுஞ்சாலையோரங்களில் இருந்த 163 மதுக் கடைகள் புதுவையில் மூடப்பட்டன. இதில் புதுவையில் 83, காரைக்காலில் 40, மாஹேயில் 34, ஏனாமில் 6 மதுக் கடைகள் அடங்கும். பின்னர், அரசு தலையிட்டு 42 கடைகள், பார்களை வேறிடங்களுக்கு மாற்ற அனுமதியளித்தது. 121 மதுக் கடைகள் மூடப்பட்டன. இதில் புதுவையில் 59, காரைக்காலில் 27, மாஹேயில் 31, ஏனாமில் 4 மதுக் கடைகள் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com