போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுடன் செப். 19 இல் முத்தரப்பு பேச்சுவார்த்தை

வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, போக்குவரத்துக்கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் செப்டம்பர் 19 ஆம் தேதி தமிழக அரசு முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, போக்குவரத்துக்கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் செப்டம்பர் 19 ஆம் தேதி தமிழக அரசு முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லையெனில், அறிவித்தபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 13 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை கடந்த 31-12-2016 அன்று அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அமல்படுத்தவில்லை. அதன் காரணமாக, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 2016 இல் தொடங்கி இதுவரை 16 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையிலும், தொழிலாளர் நலத் துறை ஆணையர் தலைமையிலும் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சுமுக முடிவை எட்டுவதற்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் தலைமையில் துணைக் குழு ஒன்று அரசு சார்பில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்தத் துணைக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இறுதியாக கடந்த வாரம், நடைபெற்ற இந்தத் துணைக் குழுவுடனான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.
அதன்படி, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்துத் துறை செயலரிடம் கடந்த 9 ஆம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அதில், செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு மீண்டும் வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால், போராட்டத்தைத் தடுக்க அரசு முயற்சித்து வருகிறது.
அதற்காக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வருகிற 19 ஆம் தேதி இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதுகுறித்து போக்குவரக்கழக தொழிலாளர் சங்க (சிஐடியு) தலைவர் சவுந்தரராஜன் கூறியது:
தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வருகிற 19 ஆம் தேதி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இதில் எங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உடன்பாடு ஏற்பட வில்லையெனில், அறிவித்தபடி செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com