ராகுல் காந்தி விரைவில் கட்சித் தலைமை பொறுப்பேற்பார்: புதுவை முதல்வர் நாராயணசாமி

ராகுல் காந்தி விரைவில் கட்சித் தலைமை பொறுப்பேற்பார் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி விரைவில் கட்சித் தலைமை பொறுப்பேற்பார்: புதுவை முதல்வர் நாராயணசாமி

ராகுல் காந்தி விரைவில் கட்சித் தலைமை பொறுப்பேற்பார் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த நிலையைக் காட்டிலும் தற்போது பெட்ரோல், டீசல் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விளையும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மக்களை சுரண்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் பொருளாதாரம் சரிந்துள்ளதால் அதை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் டீசல் மீது மறைமுகமாக வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் 50 சதவீதம் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையினை கடுமையாக உயர்த்தியுள்ளது. மக்களை சுரண்டும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்ற வேண்டும்.

எம்சிஐ விவகாரம்
விதிகளை மீறி சேர்க்கப்பட்டதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 700-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் சேர்க்கையை ரத்து செய்ய எம்சிஐ
உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் தலையிடுவதற்கான அதிகாரமும் இல்லை.

இந்நிலையில் மாணவர்கள் வெளியேற்றபட்டதற்கு மாநில அரசுதான் காரணம் என பொறுப்பற்ற முறையில் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.
எனினும் மாணவர்கள் நலன் கருதி மருத்துவக்கல்லூரிகள் நிர்வாகத்தை அழைத்துப் பேச அரசு தயாராக உள்ளோம். அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
நடைபெறும்.

கிரண்பேடி மாறுவார் என நம்பிக்கை
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த ஓராண்டுக்கு மேலாக மாநில அரசை குறை கூறி வருவது. அரசு நிர்வாகத்தில் தலையிட்டு இடையூறு செய்தல், அமைச்சர்கள், தலைமைச் செயலர் செயலர்களை விமர்சித்தல் போன்றவறறை மட்டுமே செய்து வருகிறார். மாநில வளர்ச்சிக்கு அவர் ஒரு பணியும் செய்யவில்லை.

மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் கிரண்பேடியின் கருத்து பொறுப்பற்ற வகையில் உள்ளது. தான் வகித்து வரும் பதவிக்கு களங்கம் விளைவிக்கும்
வகையில் கிரண்பேடி செயல்பாடு உள்ளது. விளம்பரத்திற்காக செயல்படக்கூடாது கிரண்பேடி தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்வதாக இல்லை.

மாநில அரசின் நிர்வாகத்திலும் சரி வளர்ச்சித்திட்டங்களிலும் சரி துணையாக இல்லாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறார். மாநில அரசைப் பற்றி மத்திய அரசுக்கு தவறான புகார்களை தெரிவிப்பதே கிரண்பேடியின் வேலையாக உள்ளது. இந்தபோக்கை அவர் மாற்றிகொள்ள வேண்டும் என பலமுறை வலியுறுத்தியுள்ளேன். அவர் தன்னை மாற்றிகொள்வார் என நம்புகிறேன்.

ராகுல் காந்தி கட்சித் தலைமை பொறுப்பேற்பார்
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் ராகுல்காந்தி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார். தற்போது
அரசியல் சூழல் மாறி வருகிறது. வரும் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com