இறுதி கட்டத்தில் கீழடி 3-ஆம் கட்ட அகழாய்வு: "முந்தைய ஆய்வுகளின் தொடர்ச்சி கிடைக்கவில்லை'

கீழடியில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் முந்தைய 2 கட்டங்களில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ, அதுதொடர்புடைய எவ்வித பொருள்களோ கிடைக்கவில்லை

கீழடியில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் முந்தைய 2 கட்டங்களில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ, அதுதொடர்புடைய எவ்வித பொருள்களோ கிடைக்கவில்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், 3-ஆம் கட்ட அகழாய்வில் 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைக்கப்பெற்றிருந்தாலும், 1500-க்கும் மேற்பட்டவை மணிகளாகவே உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. இதில் கிடைத்த பண்டைய பொருள்கள் வைத்து அங்கேயே அருக்காட்சியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே அகழாய்வுப் பணியில் இருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு தாமதப்படுத்துவதாகப் புகார் எழுந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாக, கீழடியில் ஆய்வு செய்த மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்ந்து நடைபெறும் என அறிவித்தார். இதன்படி, மே 17-இல் மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்கியது. 
இதுகுறித்து தொல்லியல் கண்காணிப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ளஅறிக்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள், பல வகையான தொல்பொருள்கள் வெளிக் கொண்டு வரப்பட்டன. 
கடந்த 2 கட்டங்களாக நடந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் நீட்சியை அறியும் வகையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் கிடைத்த குழிகளின் அருகே அகழாய்வு தொடர்ந்தது. ஆனால், புதிய பகுதியில் முந்தைய கட்டுமானங்களின் ஆழத்தை அடைந்தபோதும், அந்த கட்டுமானங்களின் தொடர்ச்சியோ, தொடர்புடைய எவ்வித கூறுகளோ கிடைக்கவில்லை. 
மிகவும் சிதிலமடைந்த வளைந்த நிலையில் ஒரு செங்கல் கட்டடம் மற்றும் 3 உறை கிணறுகள் மட்டுமே வெளிப்பட்டுள்ளன. இதுதவிர்த்து 3 மீ ஆழத்தில் தொடர்ச்சியற்றநிலையில் பெரிய அளவிலான செங்கல் கொண்டு கட்டப்பட்ட துண்டுச் சுவர் கிடைத்துள்ளது. இதன் மூலம் இப் பகுதியில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்படவில்லை என்பது தெரிய வருகிறது. துண்டுச் சுவரில் சேகரிக்கப்பட்ட கரித்துகள்கள் கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும்போது இதன் காலம் தெரியவரும்.
மூன்றாம் கட்ட அகழாய்வுக்கான காலம் குறைவாகவே இருந்ததால், 400 சதுர மீட்டர் பரப்பில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
அதிக கட்டுமானங்கள் அனைத்துக் குழிகளிலும் கிடைக்கவில்லை என்பதால் மண்ணடுக்குகள் தீவிர அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. தொடர் மழை காரணமாக ஒரு சில குழிகளில் மட்டும் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து 
கொண்டிருக்கிறது.
இந்த அகழாய்வில் 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 1500-க்கும் மேற்பட்டவை மணிகளாகவே உள்ளன. இவற்றில் 90 சதவீதம் கண்ணாடியில் செய்யப்பட்டவை. மற்றவை பளிங்கு, சூதுபவளம், பச்சைக்கல், சுடுமண்ணில் செய்யப்பட்டவை. இதுதவிர தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணி, செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்றவை கிடைத்துள்ளன.
தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய 14 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒளியன் என்ற முழுப் பெயரும், தனிநபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 
சதுரம் மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புகாசுகள், 5 தங்க பொருள்கள், சில மண் உருவங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
அகழாய்வில் கிடைத்த ஆவணப்படுத்தப்பட்ட தொல்பொருள்களின் விவரங்கள் (ட்ற்ற்ல்://ய்ம்ம்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய்) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 3-ம் கட்டத்துக்கான அகழாய்வு செப்.30-இல் நிறைவு பெறும். 
அருங்காட்சியகம் அமைத்தல் மற்றும் கட்டுமானங்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நான்காம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசின் தொல்லியல் துறை மூலமாக இந்திய தொல்லியல் துறையின் அகழாய்வு பிரிவுக்கு வரைவுத் திட்டம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com