எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் பலம் உள்ளதா?

அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் பலம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் பலம் உள்ளதா?


சென்னை: அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் பலம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆளுநரை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக மனு கொடுத்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அவைத் தலைவர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிகளும் காலி என்று அரசிதழில் செய்தி வெளியிடவும் தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இது குறித்து அவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பதன் மூலம், பெரும்பான்மையை நிரூபிக்க பழனிசாமி அரசு தயாராகி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளதா என்பது குறித்துப் பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் மொத்தமுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தால்தான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.

அந்தவகையில், சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 233 ஆக இருந்த நிலையில் தற்போது 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது தமிழக சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 215 ஆகக் குறைந்துள்ளது. எனவே ஒரு அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 108 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை இருந்தால் போதும். 

தற்போது எடப்பாடி பழனிசாமி + ஓ. பன்னீர்செல்வம் அணிகளைச் சேர்ந்த 111 உறுப்பினர்கள் (டிடிவி தினகரன் அணியில் இருந்து பழனிசாமி அணிக்கு மாறிய ஜக்கையன் உட்பட) ஆதரவு உள்ளது.

எதிரணியில் திமுக  - 89
காங்கிரஸ் - 8
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 உள்ளனர். 

தனியரசு மற்றும் தமீமும் அன்சாரி இருவரும் இதுவரை யாருக்கு ஆதரவாக உள்ளனர் என்பது குறித்து அறிவிக்கவில்லை.

எனவே, தேவையான 108 உறுப்பினர்களை விட கூடுதலாகவே 3 பேருடன் ஆளும் கட்சி இருப்பதால் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com