தமிழகத்தில் தாய் - சேய் இறப்பு சதவீதம் குறைவு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

இந்திய அளவில் தாய் - சேய் இறப்பு சதவீதம் மிகக் குறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைக்கு தடுப்பு மருந்து வழங்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைக்கு தடுப்பு மருந்து வழங்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

இந்திய அளவில் தாய் - சேய் இறப்பு சதவீதம் மிகக் குறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் இத் திட்டத்தின்கீழ் 11 லட்சம் குழந்தைகள் பயனடைவர். தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பென்டாவேலன்ட் மற்றும் ஓ.பி.வி. தடுப்பு மருந்துகளுடன் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து 6, 10, 14 வாரங்களில் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைத்து பேசியது: 
தாய், சேய் நலனில் அக்கறை கொண்டு மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசு பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
இந்த வரிசையில், இந்திய அளவில் தடுப்பு மருந்துகளால் தடுக்கக்கூடிய 9 வகையான நோய்களுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. 
இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து போலியோ, பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனத்தின் விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.
அதேபோல, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி வழங்குவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை வகிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தால் பாராட்டைப் பெற்றுள்ளது. 
தமிழகத்தில் வயிற்றுப்போக்கால் எந்தவொரு பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன், ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் திட்டம் சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை, தாய்மார்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து முற்றிலுமாகத் தடுத்து, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கிட வேண்டும். 
சுகாதாரத்துறை செய்துள்ள பல்வேறு மாற்றங்களின் காரணமாக தாய்-சேய் இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கிறது. பெற்றெடுக்கின்ற குழந்தைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புப் பணிகள், செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ-க்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பாஸ்கரன், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநர் கே.குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்துறை இயக்குநர் (ஈ.எஸ்.ஐ) இன்பசேகரன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) வளர்மதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பூங்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

முதல்வர் சொன்ன குட்டிக்கதை

நாமக்கல்: அதிமுகவில் மட்டும்தான் தொண்டர்களும் தலைவர்களாக முடியும். அதற்குத் தேவை, உண்மை, உழைப்பு, தன்னம்பிக்கை, எனக் கூறி, குட்டிக் கதையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். 
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய குட்டிக்கதை:
ஒரு நாட்டை ஒரு மகாராஜா ஆண்டு வந்தார், அவருக்கு வாரிசு கிடையாது. இதனால் இந்த நாட்டை எனக்கு பின்னால் ஆட்சி செய்ய வருபவர்கள் பெயரை அரண்மனையில் வந்து பதிவு செய்யலாம், அவருக்கு மன்னராக முடிசூட்டப்படும் என தெரிவித்தார். 
அவர் 5 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்யலாம். ஆனால், சரியாக 5 ஆண்டுகள் நிறைவுற்றவுடன் அவர் இந்த நாட்டுக்கு வெளியே இருக்கக் கூடிய தனித் தீவில் கொண்டு போய் இறக்கி விடப்படுவார். அங்கே விலங்குகள், பாம்புகள், சுனைகளுக்கு இரையாக வேண்டி வரும் என்று மகாராஜா அறிவித்தார். 
இதனால் மன்னராவதற்கு ஆசைப்பட்டவர்களும், அச்சத்தில் ஒதுங்கிக் கொண்டனர்.
ஓரிருவர் மட்டும் 5 ஆண்டு காலம் மன்னராக இருக்கிறபோதே மகாராஜாவின் மனதை மாற்றிவிடலாம் என்று நினைத்து முடிசூட்டிக் கொள்ள முன்வந்தனர். 5 ஆண்டு காலம் அரசாட்சி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் மகாராஜாவை மனம் மாற்றிட எவ்வளவோ யோசித்தார்கள்.
ஆனால், அது நடக்கவில்லை. 5 ஆண்டு காலம் நிறைவுற்றதும் அந்த மன்னர் ஒரு தனிப் படகில் ஏற்றப்படுவதும் தொலைவில் உள்ள பயங்கரமான அந்த தீவில் கொண்டுபோய் தள்ளிவிடப்பட்டு கொடிய விலங்குகளுக்கு இறையாவதும் வாடிக்கையாகிப் போனது.
இதனால் அடுத்தடுத்த காலங்களில் மகாராஜா வைத்த சோதனைக்கு ஒருவரும் முன்வரவில்லை. னால் ஓர் இளைஞன் மட்டும் மகிழ்ச்சியோடு வந்து, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தான். அவன் ஒருநாள் கூட தனக்கு மன்னராகும் வாய்ப்பை தந்த மகாராஜாவைப் போய் பார்க்கவில்லை. என்னை தீவுக்கு அனுப்பி விடாதீர்கள் என்று ஒரு நாளும் விண்ணப்பம் வைத்ததும் இல்லை, கெஞ்சியதும் இல்லை.
நல்ல மன்னன், நல்ல நிர்வாகி என்ற பெயரைப் பெற்றான். 5 ஆண்டு நிறைவுறும் காலம் வந்தபோது மக்களெல்லாம் கவலையடையத் தொடங்கினர். 5 ஆண்டு காலம் நிறைவடைந்ததும், அந்த மன்னனும் தனிப் படகில் ஏற்றப்பட்டான். நாட்டு மக்கள் எல்லாம் கவலைப்பட்டனர். 
ஆனால், படகில் ஏற்றப்பட்ட மன்னனோ, பதற்றப்படுவதற்கு மாறாக, மகிழ்ச்சியாக காணப்பட்டான். சிரித்துக் கொண்டே இருந்தான். மகாராஜாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. 5 ஆண்டுகள் மன்னராக இருந்தவர்கள் தீவுக்குப் புறப்படுகிறபோது கவலைப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவன் மட்டும் சிரித்துக் கொண்டே புறப்படுகிறானே என்று சந்தேகம் அடைந்த மகாராஜா, அதை அவனிடமே கேட்கலாம் என்று படகில் அமர்ந்திருந்த மன்னனைப் பார்த்து உனக்கு பயமாய் இல்லையா? வருத்தப்படவில்லையா? என்று கேட்டார். 
அதற்கு அந்த மன்னன், இல்லை மகாராஜா, எனது இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நான் நமது நாட்டை மட்டுமல்ல, கொடிய விலங்குகள் இருந்த அந்தத் தீவையே பண்படுத்தி, அங்கும் கோட்டைகள் கட்டி, விளைநிலங்களாக அவற்றை பண்படுத்தி, அங்கும் உழைப்பாளிகளை கொண்டுபோய் குடியமர்த்தி, அந்த தீவையும் மக்கள் வசிப்பதற்கு ஏற்ற அழகிய குட்டி நகரமாக மாற்றி விட்டேன். அதனால், இப்போது நான் அங்கு சென்றாலும், இங்கு செய்து வந்த சேவையை தொடரத்தான் போகிறேன் என்றார். அந்த இளைஞரை பாராட்டிய மகாராஜா, உன்னைப்போன்ற ஒரு சாதுர்யமான சேவையாளரிடம் தான் இந்த நாட்டை ஒப்படைக்க நான் காத்திருந்தேன். அது நிறைவேறிவிட்டது என்று சொல்லி மகிழ்ந்தார். 
தொண்டு நோக்கம் என்பது தூய்மையானதாகவும், விவேகம் நிறைந்ததாகவும் இருந்து விட்டால், எதை நினைத்தும், யாரை நினைத்தும் அச்சப்பட அவசியமில்லை. நமக்கு தண்டனை என்று நினைத்து, பிறர் செய்யக்கூடிய தீங்குகளை கூட நமக்கான வாய்ப்புகளாக மாற்றி விட முடியும். நம்மை நோக்கி வீசப்படும் கற்களை கூட நமக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் காட்ட முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com