பறவைகளை காணச் சென்று படகு பழுதால் கடலில் சிக்கிய 18 இயற்கை ஆர்வலர்கள்: 4 மணி நேரம் போராடி மீட்ட இந்திய கடலோரக் காவல் படை

பறவைகளை காணச் சென்று படகு பழுதானதால் கடலில் சிக்கிய 18 இயற்கை ஆர்வலர்களை இந்திய கடலோரக் காவல் படையினர், புதுச்சேரி காவல்துறை ஒத்துழைப்போடு
பறவைகளை காணச் சென்று படகு பழுதால் கடலில் சிக்கிய 18 இயற்கை ஆர்வலர்கள்: 4 மணி நேரம் போராடி மீட்ட இந்திய கடலோரக் காவல் படை

பறவைகளை காணச் சென்று படகு பழுதானதால் கடலில் சிக்கிய 18 இயற்கை ஆர்வலர்களை இந்திய கடலோரக் காவல் படையினர், புதுச்சேரி காவல்துறை ஒத்துழைப்போடு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பத்திரமாக மீட்டனர்.

புதுவையில் உள்ள இந்திய கடலோரக்காவல் படை நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு புதுச்சேரி சுற்றுலா குழுவிடம் இருந்து கிடைத்த தகவலில் காலாப்பட்டு அருகே நடுக்கடலில் என்ஜின் பழுதால் விசைப்படகு 18 பேருடன் மூழ்கும் நிலையில் உள்ளதாக தகவல் கிடைத்தது. மேலும் சுற்றுலா குழுவைச் சேர்ந்த நாதன் என்பவரும் புதுவை காவல்துறை வடக்கு எஸ்.பி ரச்சனா சிங்குக்கு தகவல் தெரிவித்தார். அவர் இச்சம்பவம் தொடர்பாக சீனியர் எஸ்.பி. ராஜிவ் ரஞ்சனுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படை, புதுச்சேரி காவல்துறை இணைந்து கடலில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தன. இதையடுத்து கடலோரக் காவல்படை டிஐஜி எஸ்சி.தியாகி உத்தரவின்படி மீட்பு படகு (இன்டர்செப்டர் ஐசி-119) இரவு 8 மணிக்கு தேங்காய்த் திட்டு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி நடப்பதாலும் ம் போதிய வழிகாட்டி விளக்கு வசதி இல்லாமலும்  கடும் சிரமத்துக்கு இடையே மீட்பு படகு குழு முகத்துவாரத்தை கடந்து கடலுக்குள் சென்றது. கடுமையான வானிலை, கடல் கொந்தளிப்பு, போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கடலோரக் காவல் படை மீட்பு குழு பழுதான படகில் தத்தளித்த 12 பேரை மீட்டு அவர்களுக்கு முதலுதவி செய்தது. ஏற்கெனவே 6 பேரை மீனவர்கள் காப்பாற்றி தங்கள் படகில் அழைத்துச் சென்று தேங்காய்த் திட்டு துறைமுகத்தில் பத்திரமாக சேர்த்ததாக தெரிவித்தனர். கடலோரக் காவல் படையால் மீட்கப்பட்ட 12 பேரும் திங்கள்கிழமை அதிகாலை 3.05 மணிக்கு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை டிஐஜி தியாகி, வடக்கு எஸ்.பி. ரச்சனா சிங் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

கடலோரக் காவல்படை, காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு
இந்நிலையில் கடலில் சிக்கி தத்தளித்த 18 பேரை மீட்ட கடலோரக் காவல் படை, புதுவை காவல்துறையினருக்கு சட்டப்பேரவை வளாகத்தில் பாராட்டி முதல்வர் நாராயணசாமி கெளரவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விசைப்படகின் உரிமையாளர் தரப்பு கடலில் பறவைகளை காணச் செல்வதற்காக அரசிடம் அனுமதி கேட்டனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு விசைப்படகு மூலம் தமிழகம், கர்நாடகம், மும்பையில் இருந்து வந்திருந்த இயற்கை ஆர்வலர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் தங்கள் பணியை முடித்து மாலை 5 மணிக்குள் வந்திருக்க வேண்டும். அவர்கள் சென்ற விசைப்படகு கடல் பாதுகாப்பு சட்டத்தின்படி 1 கடல் மைல் தொலைவுக்கு தான் இயக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த படகின் மூலம் 19 கடல் மைல் தொலைக்கு (40 கி.மீ) தூரம் சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் அந்த படகில் தகவல் தொடர்பு சாதனங்களோ, விளக்குகள், உயிர் காக்கும் கருவிகள், உடைகள் எதுவும் இல்லாமல் சென்றுள்ளனர்.

ஆழ்கடலுக்கு சென்றதால், செயல்திறனை இழந்த படகின் 2 என்ஜின்களும் பழுதாகி விட்டன. கடலில் இருள் சூழ்ந்த நிலையில் படகில் கடல் நீர் புகுந்தால் அதில் இருந்தவர் எஸ்.பி. ரச்சனா சிங்கை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து கடலோரக் காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது மீட்பு குழு கப்பல் மூலம் சென்று கடலில் தத்தளித்தவர்களை கடல் கொந்தளிப்பு, மோசமான வானிலையை மீறி மீட்டு வந்துள்ளனர்.

அனுமதியின்றி கடலுக்குள் சென்றது தொடர்பாக காவல்துறை சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும். புதுவையில் உள்ள படகுகள் நிலை, அவற்றின் செயல்திறன், உரிமம் தொடர்பாக அரசு ஆய்வு செய்து கடலுக்குள் செல்வதற்கான நிலையான வழிகாட்டி விதிகளை வகுக்கும்.

இலங்கையில் இருந்து 6 படகுகள் மீட்பு
காரைக்காலைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். 10 படகுகள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதினேன். அதற்கு தற்போது அவர் அனுப்பிய பதில் கடிதத்தில் 6 படகுகள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. மீதமுளள 4 படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள 6 மீனவர்களையும் விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

3 மாதங்களில் கொலை வழக்குகளில் துப்புதுலக்க கெடு
கடந்த ஓராண்டுக்கு முன்பு நடந்த நெல்லித்தோப்பு மார்வாடி கொலை வழக்கு, முத்தியால்பேட்டை கலைவாணி கொலை வழக்கு, சிறுவன் கடத்தல் வழக்குளில் போதிய துப்பு கிடைக்காமல் தேக்கமடைந்துள்ளன. 3 மாதங்களுக்குள் அவை தொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியைக் காட்டிலும் புதுவையில் தற்போது குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இரவு நேர ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளே நேரில் சென்று ரோந்து மேற்கொள்கின்றனர். குற்றங்களை நடக்காமல் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் மையஙகளில் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு அதிக கவனம் தந்து அரசு செயல்படும்.

கடலில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்ட கடலோரக் காவல்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com