மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை: சிறுவாணி நீர்மட்டம் ஒரே நாளில் 4.6 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் பலத்த மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.6 அடி உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் பலத்த மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.6 அடி உயர்ந்துள்ளது.
இந்த மழையால் பேரூர் படித்துறையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நீர்வரத் தொடங்கியது. 
கேரளத்தில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதில், கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சனிக்கிழமை ஒரே நாளில் 154 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அணையின் அடிவாரப் பகுதிகளில் 50 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. அணையின் முழுக் கொள்ளளவு 50 அடியாகும். தற்போது, 41.6 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும், சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டமானது 37 அடியாக இருந்தது. இந்நிலையில், ஒரே நாளில் 4.6 அடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், அணையில் இருந்து தற்போது குடிநீர்த் தேவைக்காக நாளொன்றுக்கு 3.70 லட்சம் மில்லி லிட்டர் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கோவை குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவிக்குச் செல்லும் சாடிவயல் பாலத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனர். 
நொய்யலின் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குனியமுத்தூர் அணைக்கட்டு வழியாகப் பயணிக்கும் நீரானது பேரூர் சொட்டையாண்டி குட்டை, பேரூர் பெரியகுளம், தங்க நாராயண் சமுத்திரகுளம், குனியமுத்தூர் செங்குளம் வழியாக சுமார் 12 கி.மீ. தூரம் பயணித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் குறிச்சிக்குளத்தை வந்தடைந்தது.
குறிச்சிக்குளத்துக்கு மழை நீர் வரும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், ராஜ வாய்க்கால் சீரமைக்கப்பட்டதாலும் இரு ஆண்டுகளுக்குப் பின்னர் குறிச்சிக்குளத்துக்கும் நீர்வரத் தொடங்கியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com