அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணியில் பல கோடி முறைகேடு?

திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணியில் பல கோடி முறைகேடு?

திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற திருப்பணிகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் கோயிலில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பெயர்ந்து விழுந்த இடிதாங்கி: கும்பாபிஷேகம் நடைபெற்ற சில தினங்களிலேயே கோயிலின் திருமஞ்சன கோபுரத்தில் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த இடிதாங்கி பெயர்ந்து கீழே விழுந்தது. இது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோயில் நான்காம் பிரகாரத்தில் சின்ன நந்தி அருகே உள்ள நளேஸ்வரர் சன்னதி மண்டபத்தின் மேல்புற அலங்கார வளைவுகள் (கருங்கற்களால் ஆனவை) திங்கள்கிழமை காலை உடைந்து விழுந்தன. காலை நேரம் என்பதால் பக்தர்கள் யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

கொடிமரத்திலும் ஊழல்: உண்ணாமுலையம்மன் சன்னதிக்கு புதிதாக கொடிமரம் செய்ய பல பேரிடம் பல லட்சம் நன்கொடை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல, திருப்பணி ஸ்தபதிகள் மூலம் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி, அவருக்குத் துணையாக இருந்த கோயில் ஊழியர்கள், ஸ்தபதிகளிடம் உரிய விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து இந்து முன்னணி மாவட்டத் தலைவர் டி.எஸ்.சங்கர் கூறியதாவது: கும்பாபிஷேக திருப்பணிக்கு முதலில் ரூ. 15 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பணிகள் செய்து முடிக்கப்பட்டபோது ரூ. 50 கோடி என்றார்கள். ரூ. 50 கோடியில் திட்ட மதிப்பீடு செய்தவர்கள் கோயில் குளத்தைக் கூட தூர் வாரவில்லை.

இதேபோல, கும்பிஷேக திருப்பணிக்கு பக்தர்களிடம் இருந்து எவ்வளவு நன்கொடை வந்தது. கோயில் நிர்வாகம் எவ்வளவு செலவு செய்தது என்ற தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூட தர மறுக்கிறார்கள்.

கோயில் திருப்பணி தொடங்கியதில் இருந்து முடியும் வரை 3 இணை ஆணையர்கள் மாறிவிட்டனர்.

கோயில் கும்பாபிஷேக திருப்பணியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது உண்மை. இந்த முறைகேட்டில் அப்போது இருந்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கும் தொடர்பு உள்ளது.

எனவே, கோயில் கும்பாபிஷேக திருப்பணியில் நடைபெற்ற பல கோடி முறைகேடு குறித்து விசாரிக்க தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைக்க  வேண்டும்  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com