18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் சட்டப்படி செல்லாது: முன்னாள் சட்டப்பேரவை தலைவர்கள் கருத்து

18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் சட்டப்படி செல்லாது: முன்னாள் சட்டப்பேரவை தலைவர்கள் கருத்து

டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை நீக்கம் செய்திருப்பது சட்டப்படி செல்லாது என்று முன்னாள் சட்டப்பேரவை தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை நீக்கம் செய்திருப்பது சட்டப்படி செல்லாது என்று முன்னாள் சட்டப்பேரவை தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடபட்டி முத்தையா: ஆளுநரைச் சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. அரசியல் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 18 எம்.எல்.ஏ-க்களை நீக்கியிருப்பதற்காகச் சொல்லப்படும் காரணம் சரியானது இல்லை. இந்நடவடிக்கையில் பேரவைத் தலைவர் மட்டுமல்லாமல், முதல்வர், அரசு கொறடா ஆகியோர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாக நேரிடும்.
திமுக ஆட்சியில் பேரவைத் தலைவராக இருந்த ஆவுடையப்பன் கூறியது: எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவலே செய்யாதபோது, கட்சி தாவியதாக நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது இல்லை. எந்தக் கட்சி சின்னத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனரோ, அந்தச் சின்னத்தின் எம்.எல்.ஏ.க்களாகத்தான் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளனர். இதில் தவறு இல்லை. 
இதுபோன்ற நடவடிக்கையால் எடியூரப்பா வழக்கில் 7 எம்.எல்.ஏ.க்களை நீக்கியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், பேரவைத் தலைவர் தனபாலின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.
திமுக ஆட்சியில் பேரவைத் துணைத் தலைவராக இருந்த வி.பி.துரைசாமி கூறியது: 18 எம்.எல்.ஏ.-க்களை நீக்கியிருப்பது அரசியல் சட்டத்துக்கு முரணான செயல். இதுவரையிலான சுதந்திர வரலாற்றில் இதுபோன்ற தகுதி நீக்கம் நடந்தது இல்லை. பேரவைத் தலைவர் ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார். பேரவைத் தலைவரின் நடவடிக்கை நீதிமன்றத்தில் செல்லாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com