குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்த தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ்.
தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்த தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ்.

தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை காலை நேரில் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு, மாலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் தற்போது எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் 21 பேர் தமிழக ஆளுநரைச் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் கே.பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. மேலும், இது தொடர்பாக திமுக தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் வரும் 20-ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதுபோன்ற சூழலில், பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக முதல்வரை அழைக்கலாமா என்பது குறித்து குடியரசுத் தலைவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 
இன்று சென்னை வருகை
ஆளுநர் வித்யாசாகர் ராவ் செவ்வாய்க்கிழமை (செப். 19) நண்பகல் 12.40 மணியளவில் சென்னை வருகிறார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவர் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. 
குறிப்பாக, பேரவைத் தலைவர் பி.தனபால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பைப் பொருத்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நம்பிக்கை வாக்குக் கோருமாறு அவர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடக் கூடும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com