குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைக்க முயற்சி: மு.க.ஸ்டாலின்

குறுக்கு வழியில் ஆட்சியைத் தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு முயற்சிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைக்க முயற்சி: மு.க.ஸ்டாலின்

குறுக்கு வழியில் ஆட்சியைத் தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு முயற்சிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, வழக்குரைஞர் அணித் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:- கட்சி தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையில் பேரவைத் தலைவர் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்துள்ளார். நியாயமாக, ஒரு கொறடாவின் உத்தரவை, அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் மீறினால், கட்சித் தாவல் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுதான் முறை. அதுதான் சட்டம். 
ஜனநாயக விரோத நடவடிக்கை: ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது, பேரவைத் தலைவரும், முதல்வரும் கூட்டு சேர்ந்து, சதி செய்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளனர் என்பதையே காட்டுகிறது.
6 மாதத்துக்கு முன்பாக இதே சட்டப்பேரவையில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவரிடம் புகார் கொடுத்துள்ளனர். 
ஆனால், அந்தப் புகாரின் மீது பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் காரணம் என்னவென்றால், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை இப்போது அவர்களுக்கு வந்துள்ளது. 
இந்நிலையில் 18 பேரை நீக்கி விட்டால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதால், அரசு குறுக்கு வழியில் இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கியுள்ளது.
நீதிமன்றம் சென்றது ஏன்? குட்கா பிரச்னையை வைத்து திமுகவின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களை நீக்குவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தடுத்து நிறுத்தவே நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம். நீதிமன்றத்தில் அந்தப் பிரச்னை புதன்கிழமை வர உள்ளது.
தொடர்ந்து மக்கள் மன்றத்திற்கும் செல்வோம். எது எப்படியிருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைப் பற்றி மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் மன்றத்தில் பழனிசாமி அரசு தோற்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com