கோவையில் தொடர் மழை: நொய்யலில் வெள்ளப் பெருக்கு

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பேரூர் நொய்யல் ஆற்றில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில் மலர் தூவி வழிபாடு நடத்தும் பொதுமக்கள்.
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில் மலர் தூவி வழிபாடு நடத்தும் பொதுமக்கள்.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பேரூர் நொய்யல் ஆற்றில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கேரளத்தில் பெய்துவரும் தென் மேற்குப் பருவமழையின் தாக்கம் எல்லைப் பகுதியை ஒட்டிய கோவை மாவட்டத்திலும் சில நாள்களாக நீடித்து வருகிறது.
சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், நொய்யலின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில் அதிக அளவு நீர் வெளியேறுகிறது.
இந்த நிலையில், பேரூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையில் உள்ள பாலம் முழுவதுமாக நிரம்பி ஒரு அடிக்கு மேலே தண்ணீர் சென்றது.
இந்த வெள்ளப் பெருக்கால் பேரூர்-தொண்டாமுத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
இதனிடையே, கோவை தெற்கு தீயணைப்புத் துறையினர் சார்பில், வெள்ளம் அதிகரிக்கும்போது எவ்வாறு பாதுகாப்பாக பாலத்தைக் கடப்பது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) குமரேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
சிறுவாணிக்கு சீரான நீர்வரத்து; அதிக அளவு குடிநீர் விநியோகம்: சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் முழுக் கொள்ளளவை எட்ட இன்னும் 8 அடி மட்டுமே உள்ளது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி சிறுவாணி அணையின் மேல் பகுதிகளில் 130 மில்லி மீட்டரும், அடிவாரப் பகுதிகளில் 70 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக ஞாயிற்றுக்கிழமை 3.70 லட்சம் மில்லி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. திங்கள்கிழமை 5.40 லட்சம் மில்லி லிட்டர் கன அடி நீர் எடுக்கப்பட்டது.
கோவை குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம்: கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அருவியின் நுழைவுவாயிலில் உள்ள சாடிவயல் ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் அளவு குறைந்தால் மட்டுமே செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். 
நொய்யல் அன்னைக்கு தமிழ் முறைப்படி வரவேற்பு: மாணிக்கவாசகர் அருட்பணி மன்றம் சார்பில் பேரூர் படித்துறையில் தமிழ் முறைப்படி திருக்குறள், தேவாரம் பாடி நொய்யல் அன்னைக்கு திங்கள்கிழமை மாலை 4.30 மணி அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பூ, மஞ்சள், நெல் உள்ளிட்ட நவதானியங்களை ஆற்றில் தூவி வழிபட்டனர். 
நொய்யலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குனியமுத்தூர் அணைக்கட்டில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் குறிச்சி குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், வெள்ளலூர் ராஜவாய்க்காலில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 
இதேபோல் நீர்வரத்து அதிகரித்தால் சில நாள்களில் குறிச்சி குளம் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. குறிச்சிக்குளம் நிரம்பினால் கோவைப்புதூர், வெள்ளலூர், மதுக்கரை உள்ளிட்ட சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
நீலகிரி மாவட்டம் கூடலூரில்....
கூடலூர் பகுதியில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. கூடலூர்-உதகை மலைப் பாதையில் சனிபகவான் கோயில் அருகே ராட்சத மரம் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையின் குறுக்கே விழுந்ததால், இரவு முழுவதும் இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறமும் கடும் குளிரில் காத்துக்கிடந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் போராடி இடிபாடுகளை அகற்றியதையடுத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
கூடலூர் - கோழிக்கோடு சாலையில், தேவாலா அருகே நீர்மட்டம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேவாலாவிலிருந்து சோளவயலுக்குச் செல்லும் சாலையில் இருந்த பாலமும் நிலச்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதனால், தேவாலாவிலிருந்து சோளவயல் அதன் சுற்றுப்புற கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்களை வைத்து தாற்காலிகப் பாலம் அமைத்து ஆற்றைக் கடந்து செல்ல அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com