தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம்: பேரவைத் தலைவர் நடவடிக்கை

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பி.தனபால் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதன் காரணமாக,
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம்: பேரவைத் தலைவர் நடவடிக்கை

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பி.தனபால் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதன் காரணமாக, 18 பேரும் தங்களது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை இழந்து விடுவதாக சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
கொறடா புகார்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நீக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் கடந்த 22-ஆம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். இந்தச் செயல்பாடு தனது உத்தரவை மீறியதாக அரசு கொறடா ராஜேந்திரன் புகார் தெரிவித்தார். இது குறித்த புகார் மனுவை பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் அவர் அளித்தார்.
இந்த புகார் மனுவை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் தனபால், 19 எம்.எல்.ஏ.-க்களும் விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் பிறப்பித்தார். இந்த நோட்டீஸுக்கு எழுத்துப்பூர்வமான பதிலை 19 எம்.எல்.ஏ.-க்களும் அளித்தனர்.
ஆனால், இந்தப் பதிலை இடைக்கால பதிலாகவே ஏற்பதாகவும், முழுமையான பதிலை அளிக்க செப்டம்பர் 5- ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாகவும் பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார்.
அவகாசம் அளிக்க மறுப்பு: பேரவைத் தலைவர் தனபாலின் நோட்டீஸுக்கு பதிலளிக்க 15 நாள்கள் அவகாசம் வேண்டுமென டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடந்த 7-ஆம் தேதியன்று கடிதம் அளித்தனர். ஆனால், இந்த கால அவகாச கோரிக்கையை பேரவைத் தலைவர் தனபால் நிராகரித்தார்.
செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் உரிய பதிலை அளிக்க வேண்டுமென பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார். இதனிடையே கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.டி.கே.ஜக்கையன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். பேரவைத் தலைவர் தனபாலிடமும் தனது விளக்கக் கடிதத்தை நேரில் அளித்தார்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த 14-ஆம் தேதியன்று பேரவைத் தலைவர் தனபாலைச் சந்தித்த டிடிவி தினகரன் தரப்பினர், தாங்கள் ஏற்கெனவே கோரிய விளக்கங்களையும், அதுதொடர்பான ஆவணங்களையும் அளிக்க வேண்டுமெனக் கேட்டனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க பேரவைத் தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.


அதிரடி நடவடிக்கை: செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் உரிய பதிலை அளிக்காத காரணத்தால், டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை பேரவைச் செயலகம் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமையன்றே இதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன.
தகுதியிழப்பு: இந்த நிலையில், 18 எம்.எல்.ஏ.-க்களையும் தகுதி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதுகுறித்து, பேரவைச் செயலாளர் க.பூபதி வெளியிட்ட உத்தரவு:-
இந்திய அரசமைப்புச் சட்டம் பத்தாவது அட்டவணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், 18 எம்.எல்.ஏ.-க்களையும் திங்கள்கிழமை (செப். 18) முதல் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, 18 பேரும் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை இழந்து விட்டார்கள்.
அரசிதழில் வெளியாகும்: 18 எம்.எல்.ஏ.-க்களையும் பதவி நீக்கம் செய்தது தொடர்பான உத்தரவு தமிழக அரசிதழில் வெளியாகும். இந்த அரசிதழின் நகல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின், ஆணையத்தின் சார்பில் 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப் பேரவையின் தற்போதைய பலம் என்ன?
மொத்தம் 234
அதிமுக 116
தகுதி நீக்கம் 18
திமுக 89
காங்கிரஸ் 8
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1
பேரவைத் தலைவர் 1
காலியிடம் 1
கடிதம் முதல் தகுதி நீக்கம் வரை...
ஆகஸ்ட் 22: 
முதல்வர் பழனிசாமியை பதவி நீக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். 
ஆகஸ்ட் 24: 
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவரிடம் அரசு கொறடா புகார் மனு. உரிய விளக்கம் அளிக்க 18 பேருக்கும் பேரவைத் தலைவர் உத்தரவு. 
ஆகஸ்ட் 30: 
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் இடைக்கால பதில் மனு தாக்கல்.
செப்டம்பர் 7: 
முழுமையான பதிலை அளிக்க 15 நாள்கள் அவகாசம் கோரினர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்கள். இதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் தனபால், ஒரு வாரத்தில பதில் தரக் கோரினார்.
செப்டம்பர் 14: 
இறுதி பதிலை அளிக்க போதிய ஆவணங்களையும், கர்நாடக போலீஸ் பாதுகாப்பையும் டிடிவி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கோரினர்.
செப்டம்பர் 18: 
உரிய பதிலை அளிக்காத காரணத்தால், 18 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவிப்பு. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 18 தொகுதிகளும் காலியானதாக அரசிதழில் வெளியீடு.
அனைத்து சலுகைகளும் ரத்து
தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை உறுப்பினர்கள் 18 பேருக்கான அனைத்து சலுகைகளும் ரத்தானது.
ஒரு சட்டப் பேரவை உறுப்பினருக்கு மாத ஊதியம், படிகள் உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலையில் எம்.எல்.ஏ.-க்களுக்கான மாத ஊதியத்தை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சலுகைகள் ரத்து: ஒரு எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவியை இழக்கும் நிலையில், அவருக்கான அனைத்துச் சலுகைகளும் ரத்தாகிறது. ஒரு எம்.எல்.ஏ.-வுக்கு பேருந்து பயணச் சலுகை (ரயில் மற்றும் பேருந்து), ரூ.250 மாதக் கட்டணத்தில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கீடு, தொகுதியில் தனி அலுவலகம் போன்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
மருத்துவ வசதிகள் குறிப்பாக முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கும் நிதியுதவி கொடுக்கப்படுகிறது. இந்தச் சலுகைகள் அனைத்தும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ரத்தாகிவிடும். தொகுதிகளுக்குள்ளும் அவர்கள் சாதாரண வாக்காளர்களாகவும், அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகராகவும் கருதப்படுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com