சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏக்கள். 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏக்கள். 

நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு: மு.க.ஸ்டாலின்

நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பல முறை திமுக சார்பில் கோரிக்கை வைத்தும் அதை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் ஜனநாயகப் படுகொலை செய்யும் வகையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக ஒரே நாளில் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி காலியானதை அறிவிக்க...சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோது ஆர்.கே.நகர் தொகுதி காலியானது என்று அறிவிக்க பேரவைத் தலைவர் 43 நாள்கள் எடுத்துக் கொண்டார்.
ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளையும் ஒரே நாளில் காலியானதாக அறிவித்தது உள்நோக்கம் கொண்டது. இதே அரசு பெரும்பான்மையை நிரூபித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் மீது ஏன் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை? 
இன்று வழக்கு விசாரணை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்.20) விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம். 
தேர்தலைச் சந்திக்கத் தயார்: தமிழகத்தில் நிலையற்ற அரசு சூழல் உருவாகியுள்ளது அரசியலில் ஒரு கருப்பு அத்தியாயம். தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனைச் சந்திப்பதற்கு திமுக தயாராக உள்ளது என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு பணத்தைச் செலவு செய்து, தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அரசு விழாக்களை திமுகவை விமர்சிக்கும் கூட்டமாக மாற்றி வருவது கண்டனத்துக்குரியது.
ஒரே நாளில் அவசர அவசரமாக 18 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தது ஆட்சியை ஜனநாயக விரோதமாக காப்பாற்றுவதற்கே தவிர, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இல்லை.
இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தும் பேரவைத் தலைவரின் அதிகார துஷ்பிரயோகம் கண்டிக்கத்தக்கது. பேரவைத் தலைவர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருபுறமும், தமிழக ஆளுநரும், முதல்வரும் மற்றொரு புறமும் கூட்டணி அமைத்து இழந்துவிட்ட பெரும்பான்மையை மீட்க குறுக்கு வழியில் அரசியல் சட்டத்தையும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் பயன்படுத்தியிருப்பது ஜனநாயக நெறிமுறைகளை வேரறுக்கும் செயல். நடுநிலை தவறிவிட்ட பேரவைத் தலைவரும், குறுக்கு வழியில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் முதல்வரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும்.
ஸ்டாலினுக்கு அதிகாரம்: தமிழக மக்களின் நலன்களையும், தமிழக முன்னேற்றத்தையும் தடுத்து ஆட்சியிலிருக்கத் துடிக்கும் இந்த அரசை வீழ்த்த சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் திமுக தொடர்ந்து போராடும்.
மு.க.ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவுக்கும் இந்தக் கூட்டம் தனது முழு ஒப்புதலை அளிக்கிறது என்று கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
ராஜிநாமா இல்லை: திமுகவின் 89 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ராஜிநாமா செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜிநாமா செய்வதால் பயன் எதுவும் இல்லை. நீதிமன்றத்தை நாடுவோம். அதில் முடிவு எட்டாவிட்டால், மக்கள் மன்றத்தை நாடுவோம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சட்டப்பேரவை கொறடா அர.சக்கரபாணி உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com