மறைமுக ஆதாயம் அடைய திமுக முயல்கிறது: அவைத் தலைவர் தனபால் தரப்பு வாதம்

தமிழக அரசியலில் தற்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி மறைமுக ஆதாயம் அடைய திமுக முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவைத் தலைவர் தனபால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார்.
மறைமுக ஆதாயம் அடைய திமுக முயல்கிறது: அவைத் தலைவர் தனபால் தரப்பு வாதம்


சென்னை: தமிழக அரசியலில் தற்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி மறைமுக ஆதாயம் அடைய திமுக முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவைத் தலைவர் தனபால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர்  தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.

உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன் வைக்கின்றனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் தரப்பில் வழக்குரைஞர் ராகேஷ் திவேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் சார்பில் அரிமா சுந்தரம் ஆஜராகியுள்ளார். அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆஜராகினர்.

முதலில் தினகரன் தரப்பு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே தனது வாதங்களை முன் வைத்தார்.

அப்போது, அவைத் தலைவர் தனபால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் குறுக்கிட்டு, தனபால் மீது அவதூறு கூறுவது  சரியல்ல. கட்சியில் அதிருப்தியாளர்களை நீக்குவது போல எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க போடப்பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம். இந்த விவகாரத்தின் மூலம் மறைமுக ஆதாயம் பெற திமுக தரப்பு முயல்கிறது என்று கூறினார்.

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தினகரன் தரப்பு வழக்குரைஞர் கூறினார்.

ஆளுநர் தரப்பு வாதத்தில், பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் இல்லை என்று கூறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞர் குறுக்கிட்டு, ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக வாதிட்டார்.

முன்னதாக தினகரன் தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை கேட்டோம். ஆவணங்களைத் தர வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை என்று அவைத் தலைவர் தனபால் பதிலளித்தார் என்று கூறினார்.

தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறும் வழக்கு என்பதாலும், மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகியிருப்பதாலும், தகுதி நீக்க வழக்கின் விசாரணையை பார்க்க சட்டக் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்து குறிப்பெடுத்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com