முதல்வரான பிறகு சசிகலாவை பழனிசாமி சந்திக்காதது ஏன்?: அமைச்சர் உதயகுமார் விளக்கம்

முதல்வரான பிறகு, வி.கே.சசிகலாவை பழனிசாமி நேரில் சென்று சந்திக்காதது ஏன் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார்.
முதல்வரான பிறகு சசிகலாவை பழனிசாமி சந்திக்காதது ஏன்?: அமைச்சர் உதயகுமார் விளக்கம்

முதல்வரான பிறகு, வி.கே.சசிகலாவை பழனிசாமி நேரில் சென்று சந்திக்காதது ஏன் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார்.
சென்னை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பிறகு, தண்டனை பெற்ற ஒருவரை சிறையில் சென்று சந்திக்கக் கூடாது என்பது மரபு. அதன் அடிப்படையில்தான் சிறைக்குச் சென்று சசிகலாவை முதல்வர் எடப்பாடி சந்திக்கவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 18 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் வெளியிட்ட தீர்ப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. அதன் மீது கருத்துச் சொல்வது சட்ட விரோதமாகும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையை... நாங்கள் தாயாய் கருதிய முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிர்ச்சியில் இருந்ததால் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலாவை தாற்காலிகமாகத் தேர்ந்தெடுத்தோம். இப்போது எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
ஜெயலலிதாதான்...முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். 60 நாள்களில் கட்சியை இணைக்க வேண்டும் என்று தினகரன் கெடு விதித்திருந்தார். இப்போது நாங்கள் இணைந்து விட்டோம். தினகரன் இதில் என்ன குறை கண்டார்? நாங்கள் ஒன்று சேர்ந்ததில் என்ன தவறு கண்டார்? சசிகலாவின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்கள் ஆனதாக தினகரன் கூறுகிறார். அது தவறு. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால் அவரது தலைமையை ஏற்ற ஒன்றரை கோடி தொண்டர்களின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்கள் ஆனோம். அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர் ஜெயலலிதாதான்.
அமைச்சரவையில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஆட்சிக்கு முழு பொறுப்பாளர் ஜெயலலிதாதான். அவர்தான் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து இந்த ஆட்சியை வரவழைத்தவர். அதிமுகவுக்காக எந்த இடத்திலும் தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
தினகரனுக்கு உரிமையில்லை: எனவே, அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாட தினகரனுக்கு தார்மிக உரிமையில்லை. அதிமுகவின் பொதுக் குழுவில் இரட்டை இலையை மீட்க தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதுகுறித்த வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு வந்து விடாது. இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com