மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழை: வேகமாக நிரம்பும் கோவை குளங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த மழையால், நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கோவையில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த மழையால், நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கோவையில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. அதேபோல் கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இதனால் கோவையின் குளங்களுக்கு நீரை வழங்கும் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 கடந்த சில நாள்களாக நொய்யலில் செந்நிறத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், வழியோரங்களில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வெள்ளிங்கிரி மலை, பூண்டி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் நொய்யலுக்கு நீரை வழங்கும் சுருளி ஆறு, பெரியாறு, சின்னாறு, தாணிக்கண்டி, கல்லாறு, மங்கலப்பாளையம் வாய்க்கால், ஆனைமடுவு பள்ளம் உள்ளிட்ட சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாள்களாகவே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து இதே நிலையில் இருந்தால், புதன்கிழமையும் தடை நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நொய்யல் ஆற்றில் சில நாள்களாகப் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் கரையோரங்களில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. நொய்யல் படுகையில் உள்ள உக்குளம்,  புதுக்குளம்,  கோளராம்பதி,  சொட்டையாண்டி குட்டை,  கங்கநாராயண சமுத்திரம்,  பேரூர் பெரிய குளம்,  செங்குளம்,  குனியமுத்தூர் சிறிய குளம் ஆகியவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும்,  உக்கடம் பெரிய குளம்,  சிங்காநல்லூர் குளம்,  செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம்,  சுங்கம் வாலாங்குளம்,  முத்தண்ணன் குளம்,  நரசாம்பதி உள்ளிட்ட குளங்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
5 குளங்கள் நிரம்பின: இந்நிலையில்,  செம்மேடு பகுதியில் உள்ள உக்குளம் நிரம்பி வழியும் நிலையில்,  சித்திரைச்சாவடி வாய்க்கால் மூலம் நீர் பெறும் கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி,  குமாரசாமி குளம்,  சிங்காநல்லூர் குளம் ஆகியவையும் நிரம்பியுள்ளன.
 மேலும், உக்கடம் பெரிய குளம் 60 சதவீதமும், செல்வசிந்தாமணி குளம் 50 சதவீதமும்,  புதுக்குளம் 35 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது. கோளராம்பதி குளம்,  செங்குளம்,  பேரூர் பெரிய குளம் ஆகியவற்றில் 25 சதவீத அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. குறிச்சி குளம், வாலாங்குளம் 10 சதவீத அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. 
அண்மையில் தூர்வாரப்பட்ட நரசாம்பதி,  சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம் ஆகியவற்றில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் நிரம்பியுள்ளது. இருப்பினும் தூர்வாரப்பட்ட அனைத்துப் பள்ளங்களும் நிரம்பியுள்ளதால், இது ஏறத்தாழ அவற்றின் பழைய கொள்ளளவுக்கு சமமாக இருக்கும் என்கின்றனர் பொதுப்பணித் துறை 
அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com