ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் அல்ல: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மியான்மரில் இருந்து வெளியேறி வரும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் அல்ல: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மியான்மரில் இருந்து பௌத்தர்களின் இனவெறித் தாக்குதல் காரணமாக ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வெளியேறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். 

இந்நிலையில், மியான்மரில் இருந்து வெளியேறி வரும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் அல்ல, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து தேசிய அளவிலான மனித உரிமைகள் ஆணையத்தின் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த 2 நாள் கருத்தரங்கில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் அல்ல. அவர்கள் அதுதொடர்பான இந்திய அரசாங்கத்தின் எந்தவித சட்ட அமைப்பிலும் தெரிவிக்கவில்லை. மேலும், அகதிகளாக இந்தியாவில் குடிபெயர்ந்தது தொடர்பான எந்த ஆவணத்தையும் சமர்பிக்கவில்லை. 

ரோஹிங்யா இஸ்லாமியர்களை மியான்மர் திரும்ப அழைக்க தயாராக உள்ளதாக அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார். எனவே அவர்களை மியான்மரிடம் இந்தியா திரும்ப ஒப்படைப்பதில் யாருக்கும் பிரச்னை இல்லை. 

மேலும், இந்தியாவில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களை மியான்மரில் மறுபடி குடியேற்றுவது தொடர்பாக ஆங் சான் சூகி அழைப்பு விடுத்துள்ளார். உலக அகதிகள் சட்டத்தின்படி தற்போது இந்தியாவில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் அல்ல, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றார்.

முன்னதாக, ரோஹிங்யா இஸ்லாமியர்களால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் இதர பயங்கரவாத அமைப்புகளிடம் தொடர்பு உள்ளது என உளவுப் பிரிவு தகவல் அளித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள பௌத்தர்களின் பாதுகாப்புக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை முறைப்படி மியான்மரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 16 பக்க மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com