அரசு விழாக்களில் அதிகமாக அரசியல் பேசியது கருணாநிதிதான்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

அரசு விழாக்களில் மிக அதிகமாக அரசியல் பேசியவர் திமுக தலைவர் கருணாநிதிதான். ஆட்சியைக் குறை சொல்பவர்களுக்கு பதிலைத்தான் நாங்கள் தெரிவித்து வருகிறோம் என தமிழக முதல்வர்
நாகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
நாகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

அரசு விழாக்களில் மிக அதிகமாக அரசியல் பேசியவர் திமுக தலைவர் கருணாநிதிதான். ஆட்சியைக் குறை சொல்பவர்களுக்கு பதிலைத்தான் நாங்கள் தெரிவித்து வருகிறோம் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
நாகையில் புதன்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்தைத் திறந்து வைத்து அவர் மேலும் பேசியது : 
மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழை, எளிய மக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பினரும் பயன் பெறும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கி, நிறைவேற்றியுள்ளனர். விவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் வாழ்வாதாரமாகக் கொண்ட நாகை மாவட்டத்துக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.
விவசாயிகள், மீனவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் குழந்தைகளும் கல்வி பயில வேண்டும், அவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாக இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கல்வி வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பலர் கோலோச்சியிருப்பதற்கு எம்.ஜி.ஆரின் கல்விக் கொள்கைகளே காரணம். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கல்வி வளர்ச்சிக்காக 14 வகையான உதவிகள் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தினார். சைக்கிள் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியன ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை எளிதாக்கியுள்ளது. இதில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், வல்லரசு நாடுகளில் கூட செயல்படுத்தப்படாத முத்தாய்ப்பான திட்டம். யார் ஆட்சிக்கு வந்தாலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களைப் புறக்கணித்துவிட முடியாது. 
குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் வெட்டி எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளும், குளங்களும் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. நீர்நிலைகளிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண், விளை நிலங்களுக்கு இயற்கை உரமாகியுள்ளன. 
மேலும், நீர் வரத்துக் கிடைக்கும் போது, 3 ஆண்டுகளுக்குத் தேவையான தண்ணீரைத் தேக்கும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்துள்ளது. 
அடுத்து நாங்கள் ஆட்சி அமைப்போம் என சிலர் மனக்கோட்டை கட்டுகின்றனர். அவர்களின் மனக்கோட்டை, கடற்கரையில் கட்டப்படும் மணல் கோட்டை என்பது மக்களுக்குத் தெரியும். அர்த்தமற்ற கனவு, ஆபத்தைத்தான் தரும் என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆட்சியைக் குறை சொல்வதை வழக்கமாகக் கொண்டவர்களுக்கு, நாங்கள் பதில்தான் அளித்து வருகிறோம். 
சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொடரும் இந்த அரசு, அவரது திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி வருகிறது. 
ஸ்டாலினுக்கு பதில்....
அரசு மேடையில் நாங்கள் அரசியல் பேசுவதாக சிலர் கூறுகின்றனர். திமுக தலைவர் மு. கருணாநிதி முதல்வராக இருந்த போது, அரசு விழாக்களில் மிக அதிகமாகவே அரசியல் பேசியுள்ளார். அதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளன. கட்சியின் கொள்கையாக இருந்து, அரசின் திட்டங்களாக மாறியவற்றை நாங்கள் பட்டியலிடுகிறோம். உண்மையைப் பேசுகிறோம். அரசியல் இல்லாமல் அரசு இல்லை. மேடைகளில் கண்ணியம் காக்க வேண்டும் என்பதை எங்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் வழியில் செயல்படும் நாங்கள், கண்ணியத்தைக் கடைப்பிடித்தே வருகிறோம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழி செயல்படும் இந்த ஆட்சியின் மீதான பொறாமையில், ஆட்சி கவிழுமா? கட்சி உடையுமா? என சிலர் பகல் கனவு காண்கின்றனர். 
அதிமுக தொண்டர்களின் வாழ்த்து இருக்கும் வரை, அவர்களின் கனவு பகல் கனவாகத்தான் இருக்கும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா, இந்த ஆட்சியையும், கட்சியையும் நிச்சயம் காப்பாற்றும். யார், எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் இந்த ஆட்சியைத் தொடக்கூட முடியாது என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார். ரூ. 100.23 கோடி மதிப்பில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட்ட 46 பணிகளைத் தொடங்கி வைத்து, அரசுத் துறைகள் சார்பில் 38,248 பயனாளிகளுக்கு ரூ. 281.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் மு. தம்பித்துரை ஆகியோர் பேசினர். மாநில அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் இரா. வெங்கடேசன் வரவேற்றார். நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
முதல்வர் சொன்ன குட்டிக் கதை...
நாகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய குட்டிக் கதை : 
திருமணமாகாத மண்பாண்டத் தொழிலாளர் ஒருவர் சட்டி, பானை விற்கும் கடை வைத்திருந்தார். நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது 2 மண் பானைகள் விற்பதே சிரமம் என்ற நிலையில் இருந்தார்.
அப்போது, ஒரு நாள் அவரை அணுகிய நபர், 20 பானைகள் வேண்டும் எனக் கேட்டார். கடைவீதிக்குச் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வாருங்கள், பானைகளைத் தயார் செய்து வைக்கிறேன் என அந்த மண்பாண்டத் தொழிலாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 20 பானைகளைத் தயார் செய்து வைத்த அவர், பானைகளை அடுக்கி வைத்து விட்டு அருகிலேயே அமர்ந்து கற்பனையில் ஆழ்ந்தார். 
20 பானைகளை விற்றுக் கிடைக்கும் தொகையில் கோழி வாங்க வேண்டும், கோழி முட்டையிட்டு பல கோழிகளாகும். அவற்றை விற்று ஓர் ஆடு வாங்க வேண்டும், அதிலிருந்து கிடைக்கும் ஆட்டுக்குட்டிகளை விற்று, கறவை மாடு வாங்க வேண்டும். அந்தக் கறவை மாட்டிலிருந்து கிடைக்கும் கன்றுகளை விற்று ஒரு மாட்டு வண்டி வாங்க வேண்டும். 
மாட்டு வண்டியை நல்ல விலைக்கு விற்று, குதிரை வாங்கி சொகுசாகப் பயணிக்கலாம். குதிரை குட்டி போடும். பின்னர், வசதி பெருகும். திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணத்துக்குப் பிறகு குழந்தை பிறக்கும். பானை, சட்டி செய்யும்போது அந்தக் குழந்தை களிமண்ணில் விளையாடும். பணக்காரக் குழந்தை களிமண்ணில் விளையாடலாமா? என தொடர் கற்பனையில் ஆழ்ந்த அவர், அந்தக் கற்பனையிலேயே மனைவியைக் கடிந்து கொண்டு, குழந்தையைக் கவனிக்காமல் அப்படி என்ன வேலை? குழந்தையைத் தூக்கு என கத்துகிறார்.
மனைவி இருந்தால் தானே குழந்தையைத் தூக்க வர முடியும். அவர் தனது கற்பனையில் தீவிரமாகி, தனது குழந்தையைத் தானே சமாதானப்படுத்தும் வகையில், 'அழாதேடா மகனே, அம்மா வரட்டும் அவளை இப்படி உதைக்கிறேன்' என்று கூறி, காலை வேகமாக எதிரே உதைக்க, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பானைகளும் சரிந்து உடைந்து நொறுங்கின.
கற்பனைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதைத்தான் இந்தக் கதை உணர்த்துகிறது. பலபேர் இப்படித்தான் கற்பனை செய்து கொண்டு தானும் கெட்டு, தன்னை நம்பியவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
வஞ்சகம், துரோகத்தால் ஆட்சியை அசைக்க முடியாது: ஓ. பன்னீர்செல்வம்
வஞ்சகத்தாலோ, துரோகத்தாலோ அதிமுக ஆட்சியை அசைத்து விட முடியாது என தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முன்னிலை வகித்து அவர் பேசியது: 
தனது குடும்பத்துக்காக எதையுமே சேர்த்து வைக்காமல் வாழ்ந்தவர் அண்ணா. தான் சேர்த்து வைத்ததை எல்லாம் தமிழக மக்களுக்கு கொடுத்து விட்டுச் சென்றவர் எம்ஜிஆர். தமிழகக் குடும்பங்களைத் தனது குடும்பமாக எண்ணி வாழ்ந்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களுக்காக எம்ஜிஆர் என்னவெல்லாம் செய்ய நினைத்தாரோ அதையெல்லாம் செய்தவர் ஜெயலலிதா. 
ஜெயலலிதாவின் புகழ், பெருமை, வீரம், விவேகம், கண்ணியம், கருணை, மக்கள் நலத் திட்டங்களை உலகத் தமிழர்களே கொண்டாடுகின்றனர். இதற்கு எம்ஜிஆருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் ஜெயலலிதாவை அடையாளம் காட்டியவர். 
ஜெயலலிதாவின் நல்லாட்சி இன்றும் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்யும் தொண்டர்கள் மீது சிலர் கல்லெறிகின்றனர். எதிரிகளின் சூழ்ச்சிக்குத் தொண்டர்கள் அடிபணிய மாட்டார்கள். வஞ்சகத்தோலோ, துரோகத்தாலோ ஜெயலலிதாவின் ஆட்சியை அசைத்து விட முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com