காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தக்கூடாது: மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன்

காவிரி மேலாண்மை வாரியத்தைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தக்கூடாது: மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன்

காவிரி மேலாண்மை வாரியத்தைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையே சீர்குலைக்கும் நோக்கத்துடன், காவிரி இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது கண்டனத்துக்குரியது. கர்நாடக மாநிலத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துக்காவே மத்திய அரசு இவ்வாறு செயல்படுகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதன்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதுதான் மத்திய அரசின் உடனடிக் கடமையே தவிர, தீர்ப்பை மறு ஆய்வு செய்வது இல்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இதுவரை அமைக்காததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
எனவே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் அளவுக்கு உச்சநீதிமன்றத்தில் புதுப்புது சந்தேகங்களை எழுப்புவதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். உச்ச நீதிமன்றமே இருமுறை மத்திய அரசைக் கண்டித்திருப்பதால், காவிரி மேலாண்மை வாரியத்தை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்: மத்திய அரசு இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மெத்தனமாக இருந்ததாலும், கர்நாடக அரசு உரிய காவிரி நதி நீரைத் திறந்துவிடாததாலும் தமிழகத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை. எனவே, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பைக் கவனத்தில் கொண்டும், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கவனத்தில் கொண்டும் இனியும் காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதிநீர் சம்பந்தமான வழக்கில் சுமுகத் தீர்வு எட்டப்படவும், தமிழகத்துக்கான நியாயத்தைப் பெறவும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு உட்பட்டு நடுநிலையோடும் மத்திய அரசு செயல்பட வேண்டும். 
கர்நாடக அரசும் மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காவிரி நதீநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு உரிய நீரை இனிவரும் காலம்தோறும் முறையாக, முழுமையாகக் கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com