கிரிக்கெட் மட்டை நழுவிச் சென்று தாக்கியதில் படுகாயமடைந்த மாணவர் சாவு

கிரிக்கெட் விளையாடியபோது, ஆசிரியர் கையிலிருந்த மட்டை நழுவிச் சென்று தாக்கியதில் காயமடைந்த மாணவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து
சேலம் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட மாணவரின் உறவினர்கள்.
சேலம் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட மாணவரின் உறவினர்கள்.

கிரிக்கெட் விளையாடியபோது, ஆசிரியர் கையிலிருந்த மட்டை நழுவிச் சென்று தாக்கியதில் காயமடைந்த மாணவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகேயுள்ள சித்தம்பூண்டியைச் சேர்ந்தவர் பெருமாள். ரிக் வண்டியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விஸ்வேஸ்வரன் (13), மொளசி அருகே விட்டம்பாளையத்தில் அரசு விடுதியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். 
கடந்த 17-ஆம் தேதி பள்ளி மைதானத்தில் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பள்ளி ஆசிரியரான வெண்ணந்தூரைச் சேர்ந்த குப்புசாமி (33) மாணவர்களுடன் விளையாடினார்.
அப்போது, பந்தை அடிக்கும் போது அவரது கையில் இருந்த கிரிக்கெட் மட்டை கை நழுவி மாணவர் விஸ்வேஸ்வரன் தலையைத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த மாணவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 3 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த விஸ்வேஸ்வரன் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். 
இந்நிலையில், ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அரசு நிதி உதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விஸ்வேஸ்வரன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதன்கிழமை காலை சேலம் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இருப்பினும், கோரிக்கை நிறைவேறும் வரை உடலை பெற மாட்டோம் எனக் கூறி மாணவரின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் குப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com