தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன்: கமல்ஹாசன்

அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் என நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக கூறியுள்ளார்.
தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன்: கமல்ஹாசன்

சென்னை: அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் என நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்று சம்பவங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பல அதிரடி அரசியல் கருத்துக்களையும், கண்டனங்களையும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றார். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பைும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தில்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவால், நடிகர் கமல்ஹாசனை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து இந்தியா டுடே தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது: 

அரசியலுக்குள் வருவது என்பது முட்களின் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது.

மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். அவர்கள் இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என ஆராய்வதில் ஆர்வமாக இல்லை. 

என்னைப் பொருத்தவரை அரசியல் நிறம் கருப்பு நிறத்தில் இருப்பதாகவும், அது தான் என்னுடைய நிறம். ஏனெனில் அதில் குங்குமப்பூ உள்ளிட்ட அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கிதாக உள்ளன. 

அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்றும் புதிய தலைமுறை அரசியல்வாதிகளை நாம் கண்டெடுக்க வேண்டும். அப்பொழுது தான் புதைகுழியாக இருக்கும் அரசியலை வசிப்பிடமாக மாற்ற முடியும். 

அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன். தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் உள்ளது என்றார்.

மேலும், உடனடியாக எந்தவொரு மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்கான செயல்முறையை தொடங்குவதாகவும், அதற்கு  நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறினார்.

இதே போன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com